நெஞ்சு வலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப் படுகின்றன.
அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறிய ப்படுகிறது.
இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):
இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால் தான் இதயம் சீராக இயங்குகிறது.
ஒவ்வொரு இதய துடிப்பின் போதும், இத்தகைய மின் அலைகள் இதயத்தின் மேல் பாகத்தில் இருந்து அடிப்பாகம் வரை சீராக, முறையாக பரவுகிறது.
இவ்வாறு இதயத்தில் பல பாகங்களில் ஒவ்வொரு இதய துடிப்பின் போதும், உருவாகும் மின் அலைகளை ஒரு இயந்திரத்தின் உதவியால் ஒரு தாளில் பதிவு செய்வதே இ.சி.ஜி., எனப்படுகிறது.
மாரடைப்பு வருவோருக்கு இத்தகைய மின் அலைகளின் பதிவில் மாற்றங்கள் ஏற்படும்.
அத்தகைய மாற்றங்களை வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா, எப்போது ஏற்பட்டது, இதயத்தின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டுள்ளது என்பதை அறியலாம்.
ரத்தப் பரிசோதனைகள்:
மாரடைப்பு ஏற்படும்போது இருதய தசையின் எந்தப் பாகத்தில் ரத்த ஓட்டம் தடை படுகிறதோ, அப்பகுதி சில மணி நேரங்களில் செயலிழக்கிறது.
இவ்வாறு செயலிழந்த தசைப் பகுதியில் இருந்து புரதச் சத்து கலந்த பலவகை ரசாயன பொருட்கள் கசிந்து ரத்தத்தில் கலக்கின்றன.
மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று நாட்கள் வரை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமான ரசாயனப் பொருள் கசிந்து ரத்தத்தில் கலக்கிறது.
ரத்தத்தில் இவ்வாறு கலக்கும் ரசாயன பொருட்களின் அளவை வைத்து மாரடைப்பு உறுதி செய்யப் படுகிறது.
மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நேரம், மாரடைப்பின் அளவு, இத்தகைய மாரடைப்பால் பின்னாளில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பவை பற்றியும் ஓரளவு துல்லியமாக கணிக்கலாம்.
மாரடைப்பின் போது பொதுவாக ரத்தத்தில் பின்வரும் ரசாயனப் பொருட்கள் பரிசோதிக்கப் படுகின்றன.
1) Myoglobin, 2) Troponin.
கொரனரி ஆஞ்சியோகிராம்:
இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாயைப் பரிசோதிப்ப தற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்கு கின்றனவா,
இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற் காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த “எக்ஸ் ரே’ தான் கொரனரி ஆஞ்சியோகிராம்.
ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது,
எத்தனை அடைப்பு உள்ளது, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் எளிதாக பலூன் முறை மூலம் சரிப்படுத்து வதற்கு ஏதுவாக உள்ளதா என்பவற்றை கண்டறியலாம்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவது எப்படி?
பொதுவாக இது எந்தச் சிக்கலோ, பக்க விளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனை.
மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக் குழாய் மூலமாகவோ, வலது அல்லது
இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக் குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக் குழாய்களுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக் குழாய்க்குள் செலுத்தப் படுகிறது.
இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம்.
இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும்.
எக்கோ கார்டியோ கிராம்:
இதுவும் ஒரு எளிதான, வலி ஏதும் இல்லாத பரிசோதனையே. பொதுவாக இது மாரடைப்பை கண்டுபிடிக்கத் தேவையான கட்டாய பரிசோதனை அல்ல.
ஆனால் சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழும்போது இ.சி.ஜி., பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கலாம்.
குறிப்பாக மாரடைப்பு இதயத்தின் பின்பாகத்தில் ஏற்படும் போது, இ.சி.ஜி.,யில் எந்த மாற்றமும் தோன்றாமல் இருக்கலாம்.
இத்தகைய சூழலில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பரிசோதனை யில் இடதுபுற மார்பு பகுதியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் முறை மூலம், இருதய தசையின் எல்லா பாகங்களின் செயல் பாடுகளையும் துல்லியமாக கண்டறியலாம்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாகத்தின் செயல்பாடு குறைந்தி ருப்பதை இப்பரிசோதனையில் கண்டறிந்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதன் அளவையும் உறுதி செய்யலாம்.. டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,