மனித உடல் சீராக செயல்படுவதற்கு பல வகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப் படுகின்றன.
தொடர்ந்து மூச்சு விடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.
வளர்ச்சி, பழுது பார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் இவை தான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
மனித உடல் பலவகை யான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக் கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள் தான்.
இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக் கணக்கான வேதி வினைகள் தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுது பார்ப்பு மற்றும்
ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கி ன்றன.
உடலின் வளர்ச்சி, பழுது பார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன.
உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது. உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற ஸ்டார்ச், ஆக்சிஜன் உடலுக்கு தேவைப்படுகின்றன.
உண்ணும் உணவிலிருந்து ஸ்டார்ச்சை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக் கொள்கிறது.
மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது தான் மனித உடலின் அடிப்படையான இயங்கு முறை.
இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப் பட்டிருக்கவில்லை.
சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர்.
அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.
பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது.
இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும்,
அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.
அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சி யாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது.
அதனால், இது போல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.
இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய
உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப் படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்ட வட்டமாக கண்டறிந்தனர்.
இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப் பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப் பட்டன.
அதே போல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப் பட்டன.
இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு
இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.
ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து
பரிசோதித்த போது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.
இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர்.
உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர்.
அதைத் தொடர்ந்து மற்ற விட்டமின்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது. நூற்றுக்கணக் கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர்.
அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப் பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப் பட்டது.
வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப் பொருள்.
பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக் கொள்கின்றன.
எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும் போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப் படுகிறது.
வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன் களையும், என்சைம் களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.
அதாவது, ஹார்மோன் களையும், என்சைம் களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக் கொள்கிறது.
ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமி ன்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது.
(வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.) எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப் படுகின்றன.
அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டிய திருக்கிறது.
இது போல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப் படுகின்றன.
இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை.
அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படு வதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களி லிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக் கொள்ளும்.
எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த
அளவில் தான் நமது உடலுக்குத் தேவைப் படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காத போது தான் அவற்றின் பற்றாக் குறையால் மனித உடல் பல விதமாக பாதிக்கப்படுகிறது.