கோடை கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம் !

விடுமுறை, விருந்தினர், விளையாட்டு, கேளிக்கை எனப் பல விஷயங்க ளுக்காக ‘வராதா வராதா’ என ஏங்க வைத்த கோடை, வந்ததும், ‘ஏன் தான் வந்ததோ’ என நிந்திக்கவே வைக்கிறது. 
கோடை கொடுமை


வெயிலுக்கு வயது வித்தியாச மெல்லாம் கிடையாது. 
யாரையும் தாக்கும். வெயிலின் நேரடியான மற்றும் மறைமுகமான பாதிப்புகளில் இருந்து உங்களையும், உங்கள் குழந்தைகளையும் எப்படிப் பாதுகாக்கலாம் என விளக்கமாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் லதா பட்.

‘‘சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள், உயிருள்ள, உயிரற்ற எந்தப் பொருளில் இருந்தும் தண்ணீர் சத்தை உறிஞ்சக்கூடியவை. இந்தத் தாக்கத்தினால் உடனடியாக பாதிக்கப்படுவது நமது சருமம். 

வேனல் கட்டிகளும் வியர்க்குருவும் வரும். உடலிலுள்ள செல்களில் நீர் வற்றும். வியர்வையின் மூலம் நமது உடலிலுள்ள தண்ணீரும் உப்புச்சத்தும் வெளியேறும். அது மட்டுமில்லை…

இந்த வியர்வைச் சுரப்பு, பாக்டீரியா மற்றும் பல்வேறு தொற்றுகளை வரவேற்கும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம். இதிலிருந்து தப்பிக்க நேரடி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். 

குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை. தவிர்க்க முடியாதவர்கள் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, கண்ணாடி அணிவது போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 


லைட் நிற, லூசான, காட்டன் உடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்க்கலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

உங்கள் உடம்புக்குத் தண்ணீர் தேவை என்பதை நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு மற்றும் நிறத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். 

சிறுநீர் குறைவாகவும், மஞ்சள் நிறத்திலும் வெளியேறுவது, உங்கள் உடலில் நீர் சத்து வறண்டு கொண்டிருப்பதற்கான அறிகுறி.

இருவேளைக் குளியல் இந்த நாள்களில் மிக அவசியம். வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சமும் சேர்ந்து கொள்வதால், பலரும் கிடைக்கிற நேரத்தில், கிடைக்கிற பாத்திரங்களில் எல்லாம் தண்ணீரை சேமித்து வைப்பார்கள். 

அப்படித் தேக்கி வைக்கிற தண்ணீரில் கொசுக்களும் கிருமிகளும் பரவும். அதன் விளைவாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் சீக்கிரம் தொற்றும்.

வெயில் காலத்தில் நீச்சல் பயிற்சி செய்கிற குழந்தைகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் குளம் சரியாக சுத்தப்படுத்தப்பட்டதா எனப்பார்க்க வேண்டும். 


சுத்தம் செய்யாத நீச்சல் குளத்துத் தண்ணீரை, நீச்சலின் போது தப்பித் தவறி, குடிக்க நேர்ந்தால், அதன் மூலமும் பல்வேறு நோய்கள் வரலாம்.

தண்ணீர் டேங்குகளையும் பாத்திரங்களையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீரைக் காய்ச்சியே குடிக்க வேண்டும். 

இளநீர், ஃப்ரெஷ் பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் வெளியில் உணவருந்த நேர்ந்தால், நன்கு சமைத்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. 

உதாரணத்துக்கு சூடான இட்லியுடன் சாம்பார் ஓ.கே. சட்னி வேண்டாம். வீட்டில் யாருக்கேனும் லேசான காய்ச்சல் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.
Tags:
Privacy and cookie settings