மூலநோய் ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?

3 minute read
பூச்சி மருந்து தாங்கோ' எனக் கேட்டார் அந்த நடுத்தர வயதுடைய பெண்மணி. 'ஏன்' எனக் கேட்டபோது 'மல வாசலில் அரிக்கிறது' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.



சென்ற மாதம்தான் பூச்சி மருந்து சாப்பிட்டிருந்தார். அவர் மாத்திரமின்றி முழுக் குடும்பமுமே சாப்பிட்டிருந்தது. காலில் மண்படாமல் மாடி வீட்டில் வசிக்கும் அவருக்கு குடற் புழுக்கள் தொற்றுவ தற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
மல வாசலில் அரிப்பிற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என எண்ணினேன்.

"படுக்கையில் கிடந்து கீழாடைகளை அகற்றுங்கள் குதவாயிலைச் சோதிக்க வேண்டும்" சும்மா பூச்சி மருந்தைத் தந்து அனுப்பி விடாமல் மலவாயிலைச் சோதிக்க வேண்டும் என்கிறாரே மனம் புழுங்கினார் அவர்.

ஆனால் பரிசோதித்துப் பார்த்த போது நான் நினைத்தது போலவே அவருக்கு மூலநோயின் அறிகுறிகள் தெரிந்தன.

மூலநோய் என்றால் என்ன? உணவுக் கால்வாயின் முடிவில் இருக்கும் மலவாயிலில் சிறிய வீக்கங்கள் இருப்பதையே மூலநோய் என்கிறார்கள்.

உண்மையில் இவை வெறும் வீக்கங்கள் அல்ல. சவ்வுகளும் சிறுஇரத்தக் குழாய்களும் இணைந்தவையாகும். இவை இயற்கையாகவே எல்லோரது மலவாயிலில் இருந்தபோதும் வீக்கமடையும்போதே நோயாகிறது.


இது ஏற்படக் காரணங்கள் எவை? முக்கிய காரணம் மலம்போகும்போது முக்கி வெளியேற்றுவதே யாகும். மலச்சிக்கல் மற்றொரு முக்கிய காரணமாகும் நீண்ட நேரம் மலங் கழிப்பதற்காகக் குந்தியிருப்பது.



நார்ப்பொருள் உள்ள உணவுகளை போதியவு உண்ணாமை. மலக்குடலில் ஏற்படும் சில கிருமித் தொற்றுகளும் காரணமாகலாம். ஈரல் சிதைவு நோயின் போதும் தோன்றுவதற் கான சாத்தியம் அதிகம்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தோன்றுவ தற்கான சாத்தியம் அதிகம். அதே போல வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் தோன்றலாம்.

இரண்டு முக்கிய பிரிவுகள் மூலநோயில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. உள்மூலம். இங்கு மூலவீக்கம் வெளிப்படை யாகத் தெரியாது. உள்ளேயே இருக்கும். மலத்துடன் இரத்தம் போவதை வைத்து ஊகிக்கலாம்.

ஆயினும் மருத்துவர் மலவாயில் பரிசோதனை செய்தே இதை நிச்சய்படுத்த முடியும். வெளிமூலம். இது மலவாயிலுக்கு வெளியே தள்ளிக் கொண்டிருக்கும்.

சில தருணங்களில் தானாக உள்ளே சென்று பின்னர் மலங்கழிக்கும் போது அல்லது முக்கும் போது வெளியே தள்ளும். இருந்த போதும் மருத்துவர்கள் ஒன்று முதல் நாலு நிலைகளாக மூலநோயைப் பிரித்து வைத்து அதற்கேற்ப மருத்துவம் செய்வார்கள்.

அறிகுறிகள் ஆரம்ப நிலையில் வீக்கம், வலி போன்ற வெளிப்படையான அறிகுறிகள் பொதுவாக இருப்பதில்லை. மலத்தோடு இரத்தம் போகலாம். இறுகிய மலம் வீங்கமடைந்துள்ள இரத்த நாளங்களை உராசுவதால் இவ்வாறு இரத்தம் கசியலாம்.

அத்தோடு மலத்தோடு சளி போலவும் கழியக் கூடும். மூலவீக்கம் காரணமாக மலக்குடல் உற்பக்கமாக உறுத்தலுற்று இழுபடுவதால் அதிலிருந்து நீர்போலக் கசிவு ஏற்படும். இதுவே மலத்துடன் சளிபோல வெளியேறும். 
மலவாயிலில் அரிப்பு ஏற்படுவது கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை. மேலே கூறியது போல சளிபோலக் கசிவதானது மலவாயிலை ஈரலிப்பாக வைத்திருக்கும். இதுவே அரிப்பிற்கு வித்திடும்.



மூலவீக்கம் மலவாயிலுக்கு வெளியே இறங்கினால் மட்டுமே கட்டி தெரியும். பலருக்கு மலங் கழிக்கும்போது வெளியே வந்து, பின்னர் தானாகவே உள்ளே சென்றுவிடும்.

சிலர் தமது விரல்களால் தாமாகவே தள்ளி உள்ளே செலுத்துவதும் உண்டு. ஒரு சிலரில் அவ்வாறு செல்லாமல் வலியெடுத்து மருத்துவரை நாட வேண்டியும் ஏற்படலாம். மலம் கழிக்கும் போது வலி ஏற்படுவது ஒரு சிலரில் இருக்கலாம்.

நோயை நிர்ணயிக்க நோயை நிர்ணயிக்க மருத்துவருக்கு பொதுவாகப் பரிசோதனைகள் தேவைப்படாது. கண்களால் பார்த்தும், குதத்தினுள் விரலை வைத்து பரிசோதித்தும் நிச்சயப் படுத்துவார்.
வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் என எண்ணினால் Proctoscopy, Sigmoidoscopy போன்ற பரிசோதனைகள் மூலம் மலக்குடலையும் அதற்கு மேலுள்ள உணவுக் கால்வாயையும் பரிசோதிக்கக் கூடும்.

சிகிச்சை சிகிச்சையைப் பொறுத்த வரையில் மிக முக்கிய விடயம் மலத்தை முக்கிக் கழிக்காதிருத் தலாகும்.

நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுக ளான பழவகைகள், அதிகளவு காய்கறிகள்,  இலை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

தவிடு நீக்காத அரிசி, குரக்கன் போன்ற வற்றிலும் இது அதிகமுண்டு. போதியளவு நீராகாரம் எடுக்க வேண்டும். மலம் மிகவும் இறுக்கமாக இருந்தால் Lactulose போன்றதும், நார்ப்பொருள் அதிகமுள்ள மலம் இளக்கிகளும் உதவும்.

மலம் கழிக்கும்போது வலி இருந்தால் அதைத் தணிப்பதற்கான கிறீம் வகைகள் உள்ளன. அவற்றை மருத்துவ ஆலோசனை யுடன் பூசிக் கொள்ளலாம்.



ஊசி மூலம் போன்ற Phenol மருந்துகளை அவ்விடத்தில் ஏற்றி கரையச் செய்யும் Sclerotherapy மற்றும் Rubber band ligation முறை போன்றவை சத்திர சிகிச்சை யல்லாத முறைகளாகும்.
Hemorrhoidectomy, Stapled hemorrhoidectomy போன்ற பல வகை சத்திர சிகிச்சை முறைகளும் உண்டு. இவற்றை மருத்துவர் நோயின் தன்மைக்கு ஏற்ப செய்வார். டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey),

DFM (Col), MCGP (col)

 குடும்ப மருத்துவர்
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings