இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள்.
வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள்.
இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது.
சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது.
ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள்.
காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள்.
நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும் போது இருவரின் உயிரற்ற உடல்கள் தான் காரில் இருக்கின்றன.
ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்? சில மாதங்களுக்கு முன்னால் - பூனாவில் sleeping death ஒரு கல்லூரி ஹாஸ்டல்.
பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது.
திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி.
வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது.
அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை.
விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகு வர்த்தியின் மிச்சங்கள்தான்.
கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில் தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள்.
இந்த கார்பன் மோனாக்சைடு என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரி விகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும்.
பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லா விட்டால் ஏராளமாக கார்பன் மோனாக்சைடு வாயு தான் உற்பத்தியாகும்.
வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்சைடைத் துப்பும் எமன்கள்!
(சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கார்பன் மோனாக்சைடு தான் ஜாக்கிரதை). புகை போக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம் தான் குட்டிச் சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை.
அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்து கொண்டால் சில நிமிடங்களில் மரணம் தான்.
கார்பன் மோனாக்சைடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம்.
ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்து விடுவதால்,
எழுந்து ஜன்னலைத் திறக்க வேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்து விடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்சைடைச் சுவாசித்து இறக்கிறார்கள்.
அதிக மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் பயன்கள் !
மேலை நாடுகளில் கார்பன் மோனாக்சைடு சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை.
நமக்கு கார்பன் மோனாக்சைடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்.
காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா?
தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா?
ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கார்பன் மோனாக்சைடு சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்;
காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள் சரியாகி விடும். கார்பன் மோனாக்சைடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவது தான்.
காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக் கூடாது.
மூடிய அறைக்குள் தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறு விதமான பேராபத்து காத்திருக்கிறது!
போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக் கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா?
அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக் கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள்.
தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால் தான் தலைப்புச் செய்தியாகிறது.
ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டு தான் இருக்கிறது.
அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன.
அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ்,
அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகை தான் இத்தனை விதத்தில் நாறுகிறது.
1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலை களுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டது.
அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
பொழுதனிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத் தான் பாவம், போக்கிடமே இல்லை.
சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சு மிட்டாய் நிறத்தில் வருகிறது.
வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி?
பயங்கரம்!
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோ கோனியாசிஸ் என்ற வியாதி வரும்.
கரித்தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்து விடும்.
சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு.
மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது.
நிமோனோ… என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி.
இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)
டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள்.
நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக் கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும் போது அனுதாபம் ஏற்படுகிறது.
(அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும் போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?)
மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம்.
இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்து விட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க,
கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும்.
அந்த நிலையைத் தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு 250 ரூபாய் வரை ஆகும். கவலைப்படாதீர்கள்.
இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா?
அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித் தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும் போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்து விடும்.
இறுதியாக ஒன்று மனிதன் உயிர் வாழப் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஆக்ஸிஜன் தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்கிறது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.
இந்த ஆக்ஸிஜனை மனித உடல் எந்த அளவுக்குப் பெறுகிறதோ அந்த அளவுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
காற்றிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் பெற்றுக் கொள்ள உடற்பயிற்சி வழி செய்தாலும். ஒரு சில விஷயங்களை நம் உடற் பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும்.
சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?
எப்போதும் மூச்சை கவனிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள். இணையத்தில், பேஸ்புக்கில் ஷாட் செய்யும் போது உதடுகளை இறுக மூடிக் கொள்ளுங்கள்.
மூக்கினால் சுவாசியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் வாழ்த்துகள்.