நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் நம் நாட்டில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
ஆனால் தென்னாப்பிரிக்காவில் கன்னித் தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்று அமல்படுத்தப் பட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தத் திட்டம், இளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவதை தடுக்கும் என்று
தென் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்வா ஷுலு நாட்டல் மாகாணத்தில் உள்ள ஒரு நகரின் மேயர் டூடு மசிபோகோ கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கா நாடுகளில் பள்ளி மாணவிகளும், பதின்பருவ சிறுமிகளும் எளிதில் கர்ப்பமடைகின்றனர். இதனால் இள வயது தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கு 180 இளம் பெண்கள் பதின்ம பருவத்திலேயே தங்களின் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.
இளம் வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்து வருகிறது. 18 வயதாகும் டுலோ டுலோவிற்கு கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது.
ஏனென்றால் அன்றைக்கு கன்னித்தன்மை பரிசோதனையில் பங்கெடுக்கப் போகிறாள்.
காரணம், இதில் வெற்றி பெற்றால் மட்டுமே கல்வி உதவித் தொகை கிடைக்கும். வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும் பதற்றத்துடனேயே இருந்தாள் டுலோ டுலோ.
அப்பாடா ஒரு வழியாக நான் என் கன்னித்தன்மை பரிசோதனையில் வென்று விட்டேன் என்று கூறும் டுலோ டுலோ, நான் கன்னித் தன்மையுடன் இருக்கிறேன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறுகிறாள்.
எனக்கு ஆண் நண்பர்கள் யாரும் கிடையாது. நான், மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே தான் இந்த பரிசோதனையில் பங்கெடுத்தேன்.
கன்னித்தன்மை பரிசோதனை என்பது எங்களின் கலாச்சாரத்தில் முக்கிய அம்சம் என்றும் கூறுகிறாள் டுலோ டுலோ. ஜூலு சமூகத்தைச் சேர்ந்த மக்கள், இதை ஒரு சடங்காகவே செய்கின்றனர்.
12 வயது முதல் 16 வயதுவரை கன்னித் தன்மையுடன் இருக்கும் பெண்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சியுடன் ஒரு விழாவாகவே எடுக்கின்றனர். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
தென் ஆப்பிரிக்காவில் இளம் வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு 68000 பதின்ம வயது பெண்கள் திருமணத்திற்கு முன்பே தாய்மை அடைந்தனர். அதுவே 2012 ஆம் ஆண்டில் 81000 ஆக அதிகரித்தது.
2013ம் ஆண்டில் 1 லட்சம் பதின்ம வயது பெண்கள் கர்ப்பிணிகளானதாக தெரிவித்துள்ளது தென் ஆப்ரிக்காவில் ஒரு புள்ளி விபரம்.
இளம் வயதிலேயே கர்ப்பமடைந்து குழந்தை பேற்றின் போது 36 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவயதிலேயே பெண்கள் கன்னித் தன்மையை இழப்பதோடு ஹெச்ஐவி பாதிப்பிற்கும் ஆளாகி மரணத்தைத் தழுவுகின்றனர்.
உலகிலேயே ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் நாடு தென்ஆப்ரிக்கா என்கிறது ஒரு புள்ளி விபரம்.
2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே படி, அங்கு ஆண்களை விட பதின்ம வயது இளம் பெண்களே ஹெச்ஐவியினால் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகம் பதிவாகின்றன. 2014, 15ம் ஆண்டில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கிறதாம்.
எனவே தான் கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் க்வா ஷுலு நாட்டல் மாகாணத்தில் உள்ள ஒரு நகரின் மேயர் டூடு மசிபோகோ.
இந்த கன்னித்தன்மை பரிசோதனை பாரபட்சமானது என்று மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது. இந்த பரிசோதனையை ரத்துச் செய்யுமாறு கோரியுள்ளது.
Tags: