தந்தையை போல பிள்ளை.. ஆராய்ச்சி !

தாயைப் போல பிள்ளை என்று நம் ஊரில் பழமொழியே இருக்கிறது. ஒரு தாயின் குணங்கள், உருவம் எல்லாம் குழந்தைக்கும் ஒத்திருக்கும் என சொல்வார்கள். 

அதே போல் கர்ப்பகாலத்தில் அம்மா சாப்பிடும் உணவு, இருக்கும் மனோ நிலை ஆகியவற்றைக் கொண்டே ஒரு குழந்தையின் எதிர்காலம் இருக்கும் என்றும் சொல்வார்கள்.

வாஷிங்டன்னில் இருக்கும் ஜார்ஜ்டவுன் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தந்தையும் காரணம் என்றே கூறுகின்றனர்.

புரியவில்லையா? ஒரு தாயிடமிருந்து குணங்கள், உறுப்பு அமைப்புகள், செல்களின் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கான ஜீன்கள், குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கும் கடத்தப்படுகிறது.

இது தெரிந்த விஷயம் தானே ! 

ஆனால் இது மட்டும் ஒரு குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்காது. அப்பாவின் வயது, பழக்க வழக்கங்கள், குடிப்பழக்கம், சுற்றுப்புறச் சூழ்நிலைக் கொண்டும் அந்த குழந்தையின் பிறப்பு அமைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு அப்பாவின் குண நலன்கள், மற்றும் பழக்க வழக்கங்களுமான ஜீன்கள் அப்படியே அவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. 

உதாரணத்திற்கு... வயது அதிகம் ஆனவுடன் ஒரு ஆணிற்கு குழந்தை பிறந்தால், மூளைக் கோளாறு, ஆட்டிஸம் போன்ற மூளைத் தொடர்பான நோய்களோடு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

ஒரு ஆண் தனது பருவ வயதில் அளவான சத்துமிக்க , கொழுப்பு குறைந்த உணவுகள் உண்டால், எதிர்காலத்தில் அவனுக்கு பிறக்கப்போகும் மற்றும் அடுத்தடுத்த சந்ததியினருக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பில்லை எனறு கூறுகின்றனர்.

ஒரு ஆண் அதிக மன அழுத்ததோடு, இருந்தால் அவனுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் மன நிலையும் பாதிக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில குடும்பங்களில் அப்பா மகன்களுக்கு ஒரே மாதிரியான குணங்கள், செயல்கள் இருப்பதை பார்த்திருப்போம்.

காரணம் மரபணு, இந்த வகையில் மகன், பேரன் என கடத்தப்படுவதால்தான். தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்தால், பிறக்கும் குழந்தை எடை குறைந்து பிறக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆகவே எடை குறைந்து குழந்தை பிறந்தால்,அது தாயின் போதிய ஊட்டச் சத்து இல்லாததாலோ, அல்லது வேறு காரணங்களோ இருக்கத் தேவையில்லை. தந்தையின் குடிப்பழக்கமும் காரணமாக இருக்கலாம்.

எனவே ஒரு குழந்தையின் தீய, நல்ல குணத்திற்கு அவள் அம்மாவினையே குறை கூறாமல். தந்தையும் காரணமாக இருக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

நம் குழந்தைகளுக்கு நாம்தான் ரோல் மாடல் என்பதை எப்பவும் மறக்காதீர்கள். நாம் நல்லதை விதைத்தால், குழந்தைகள் நல்லதையே அறுவடை செய்து இந்த உலகத்திற்கு தருவார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Tags:
Privacy and cookie settings