தருமபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே கனவு என அவரின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவி தீபாவளிக்காக தனது ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது, அதே ஊரை சேர்ந்த சதீஸ், ரமேஷ் என்ற இளைஞர்கள் கொடூரமாக அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதை யடுத்து அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 5 நாட்களுக்கு பிறகு அப்பெண் உயிரிழந்தார்.
இதை யடுத்து அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தவே இந்தப் பாலியல் வன்கொடுமையில் சம்பந்தபட்ட சதீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆனால் முறையான சிகிச்சை அளிக்காததே அப்பெண் உயிரிழப்பிற்கு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவியின் தந்தை கூறுகையில், என் மகள் மிகவும் அமைதியானவள்.
அவள் உண்டு அவள் படிப்பு உண்டு என்று தான் இருப்பாள். நான் டிஎஸ்பி ஆக வேண்டும் என்றும் குற்றவாளிகளை சிறையில் அடைத்து முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும் எனவும் அடிக்கடி கூறுவாள்.
இந்தச் சம்பவத்தை பொருத்தவரை போலீசார் ஆரம்பத்தில் இருந்தே தங்களிடம் மோசமாகவே நடந்து கொண்டனர். நாங்கள் புகார் அளிக்க சென்றபோது போலீஸ் முதலில் புகாரை எடுத்து கொள்ள வில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் செல்வோம் எனக் கூறியதற்கு பிறகு தான் புகாரை எடுத்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் எங்களை சந்தித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.
என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். என் மகளின் கனவை எங்களால் நிறைவேற்ற முடிய வில்லை. என உருக்கமாக தெரிவித்தார்.
Thanks for Your Comments