5 நிமிடம் அப்படியே வாக்கிங் போயிட்டு வந்துடுறேன்.. இங்கேயே நில்லுங்க... - இப்படித் தான் தனது ‘டயோட்டா இன்னோவா’ சொகுசு காரை ஓட்டி வந்த டிரைவர் பசவராஜ் பட்டீலிடம் சொல்லி விட்டுப் போனார் அவர்.
அவர் - 59 வயதான வி.ஜி. சித்தார்த்தா. கபே காபி டே அதிபர். அது கடந்த திங்கட்கிழமை... சூரியன் மறைந்து விட்ட மாலைப் பொழுது..
கர்நாடக மாநிலம், பெங்களூரு வில் இருந்து சக்லேஷ் புராவுக்கு காரில் சென்றவர் தான் வழியில் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில்... ‘வாக்கிங்’ போவதாக சொல்லி காரை நிறுத்தச்சொல்லி இறங்கி இருக்கிறார்.
வாக்கிங் போனவர் போனவர் தான். திரும்பி வரவில்லை. அப்போது யாருக்கும் தெரியாது, அவர் திரும்பி வர முடியாத இடத்துக்கு ‘வாக்கிங்’ போகிறார் என்று. போனவரைக் காணாமல் பதை பதைத்துப் போனார் டிரைவர் பசவராஜ் பட்டீல்.
சித்தார்த்தா வின் குடும்பத்துக்கு தகவல் சொன்னார். போலீசுக்கு தகவல் பறந்தது. ஆற்றுப் பாலத்தில் நடைப்பயிற்சி போனவர் வரவில்லை... தனிமையில் தான் போனார்..
ஆற்றுப் பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததை பார்த்ததாக யாரோ ஒரு மீனவர் தகவல் சொன்னார் என தகவல்கள் வந்தன. எல்லா வற்றையும் கூட்டிக் கழித்து பார்த்தால், சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.
ஆளைக் காணவில்லை என்றதுமே மாபெரும் தேடல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. பின்னே, அவர் என்ன சாமானியரா? நாட்டின் வெளியுறவு மந்திரி, கர்நாடக மாநில முதல்-மந்திரி, மராட்டிய மாநில கவர்னர் பதவி வகித்த பெரிய மனிதர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன்.
தனிப்பட்ட முறையிலும் சித்தார்த்தா தகுதியில் ஒன்றும் குறைந்தவர் அல்ல. இவரது குடும்பமும் சளைத்தது அல்ல. காபி உற்பத்தியில் 140 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்டது.
இந்தியா... ஆஸ்திரியா, செக் குடியரசு, மலேசியா, எகிப்து, நேபாளம் என பல உலக நாடுகளிலும் கிளைகளை பரப்பிய காபி டேயின் அதிபர்!
மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவர்... போர்ப்ஸ் பத்திரிகை யால் அடையாளம் காணப்பட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர். கேட்கவா வேண்டும்? தீயணைப்பு படை, கடலோரக் காவல் படை, தேசிய பேரழிவு மீட்பு படை என அத்தனை படைகளும் களம் இறக்கப்பட்டன. ஆற்றில் இறங்கி தேடினார்கள்.
36 மணி நேர தேடல் வேட்டைக்கு பின்னர் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு சித்தார்த்தா வின் உயிரற்ற உடல், நேத்ராவதி ஆற்றில் மீனவர்களால் கண்டெடுக்கப் பட்டது.
அவர் எங்கிருந்து குதித்து தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று யூகிக்கப் பட்டதோ அந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது சடலம் கிடைத்திருக் கிறது.
ஆக, காபி டே என்ற ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி கொடி கட்டிப்பறந்தவர், இல்லாமல் போய் விட்டார். எல்லோரையும் அவரது மரணம் உலுக்கி எடுத்திருக்கிறது என்பது என்னவோ உண்மை தான்.
காபி டேயின் அதிபரான அவர் தனது சொந்தக் கடையில் வரிசையில் நின்று காபி வாங்கி குடிப்பார் என்று உருகுகிறார்கள் அவரது நண்பர்கள். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்ற சித்தார்த்தா, ஆரம்பத்தில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
பின்னர் மும்பையில் முதலீட்டு வங்கியாளராக விரும்பினார். ஆனால் காலம், அவரை தொழில் அதிபராக உயர்த்தியது. அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாகி விட்டது. கவியரசு கண்ணதாசன், தேனீக்களுக்கு தேனடையே சமாதியாகி விடுகிறது என்று சொல்வதைப் போலத் தான் இதுவும்.
சித்தார்த்தா, தன் வாழ்க்கைக் கதைக்கு முடிவுரை எழுதுவதற்கு முன்னதாக தனது காபி டே குடும்பத்தி னருக்கு 27-ந்தேதி ஒரு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறார். அதில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
“37 ஆண்டு கால கடின உழைப்புக்கு பின்னர் இந்த நிறுவனத்தில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறேன். நான் பங்குதாரராக உள்ள மற்றொரு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை தந்துள்ளேன்.
ஆனால் நான் மிகச்சிறப்பான முயற்சிகளுக்கு பின்னரும் தொழிலை சரியான லாபகரமான தாக மாற்றுவதில் தோற்றுப் போய் விட்டேன்... என தொடங்கி வருமான வரித்துறை தனக்கு தந்த தொல்லைகளை சொல்லி, “ஒரு நண்பரிடம் மிகப்பெரிய தொகையை கடனாக பெற்றேன்.
மற்ற கடன் காரர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் நெருக்கடிகள் வந்துள்ளன. எல்லா தவறுகளுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்... சட்டம் என்னை மட்டுமே பொறுப்பாளி யாக்கும்... யாரையும் ஏமாற்றுவதோ, தவறாக வழிநடத்துவதோ எனது நோக்கம் அல்ல.
நான் ஒரு தொழில் அதிபராக தோற்றுப் போய் விட்டேன். ஒரு காலத்தில் என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.. மன்னிப்பீர்கள்.. மன்னியுங்கள்” என கரைந்திருக்கிறார்.
இந்தக் கடிதம் அவர் தற்கொலை செய்துதான் உயிர் துறந்திருக்கிறார் என்பதற்கு ஒரு சாசனம் போல அமைந்திருக்கிறது. ஆனாலும், சித்தார்த்தா வின் சாவில் பல மர்ம முடிச்சுகள் விழுந்துள்ளன என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
தனது ஒட்டு மொத்த பண நெருக்கடிக்கு வருமான வரித்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் ஒருவரே காரணம் என விரல் நீட்டி இருக்கிற சித்தார்த்தா வின் சொத்து மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி என்கிறார்கள். கடன்களை விட சொத்து மூன்று மடங்குக்கு அதிகம் என்று சொல்கிறார்கள்.
கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பாவே இதை ஒப்புக் கொள்கிறார். “சித்தார்த்தா வின் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவரிடம் கடன்களை விட சொத்துகள் அதிகம் உண்டு” என்று அவர் சொல்லி இருக்கிறார்.
“மிகவும் எளிமையான மனிதர் சித்தார்த்தா... அவரை 35 ஆண்டு காலமாக நான் அறிந்திருக்கிறேன். பல்லாயிரக் கணக்கானோரு க்கு வேலை தந்து அவர்கள் வாழ வழி ஏற்படுத்தி தந்தவர்.
அவரது துயரமான முடிவுக்கு பின்னணி என்ன என்பதை அரசு முறையாக விசாரித்து அறிய வேண்டும்” என்று குரல் கொடுத்திருக் கிறார் நாட்டின் முன்னாள் பிரதமர் தேவே கவுடா.
சித்தார்த்தா வின் காபி டே குளோபல் லிமிடெட் கம்பெனி, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காபி எஸ்டேட்டுகளை சொந்தமாகக் கொண்டிருக்கிறது.
ஆசிய கண்டத்திலேயே அரபிகா பீன்ஸ் காபி கொட்டை உற்பத்தியில் இந்த நிறுவனம் தான் நம்பர் 1. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என ஏற்றுமதி செய்கிறது.
1996 இதே ஜூலை மாதம் 11-ந் தேதி முதன் முதலாக பெங்களூரு வில் காபி டேயை தொடங்கினார், சித்தார்த்தா. இணையதள சேவை பிரபலமாக தொடங்கிய அந்தக் காலத்தில் அந்த சேவையையும், காபியையும் வாடிக்கை யாளர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக வழங்கினார் சித்தார்த்தா.
நாளுக்கு நாள் வளர்ந்தது, காபி டே. இந்தியாவில் மட்டும் இந்த மாத நிலவரப்படி 1,843 கிளைகள். உலக நாடுகள் பலவற்றிலும் பிரபலம் ஆகத் தொடங்கி வளர்ந்தது.
இந்தியாவில் காபி பயன்பாடு பெருகியதற்கு தனி ஒரு மனிதராக சித்தார்த்தா தான் காரணம்.. அதில் சந்தேகமே இல்லை..” என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் இந்திய காபி வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். கவேரப்பா.
காபி டேயில் சித்தார்த்தா வுக்கு 35 சதவீத பங்குகள்.. குடும்பத்தி னருக்கும், அவர்களுடைய கம்பெனிகளு க்கும் 15 சதவீத பங்குகள். இதற்கிடையே காபி துறையில் மட்டுமல்லாது, தகவல் தொழில் நுட்பத் துறையிலும் கால் பதித்தார்.
குளோபல் டெக்னாலஜி வெஞ்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அசுர வேகத்தில் வளர்ந்த காபி டே நிறுவனம் தான், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சமீப காலமாக சறுக்கத் தொடங்கி இருக்கிறது.
தொழில் போட்டிகளின் அழுத்தம்... ஒரு கட்டத்தில் தொடர் நஷ்டத்துக்கு வழிவகுத்தது. நிறுவனம் வீழ்கிற போது, அதன் பங்குகளும் பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைவது இயல்பு. அது காபி டேவுக்கும் பொருந்தியது.
இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை தொடர்ந்து பங்குச் சந்தையில் சரிந்தது. இது அந்த மனிதருக்கு மன உளைச்சலை தந்துள்ளது.
அதனால் தான் காபி டேயை 1.45 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.10 ஆயிரத்து 150 கோடி) விற்று விடலாம் என முடிவு செய்து கோகோ கோலா நிறுவனத்துடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இனியொரு விதி இல்லை என்கிற நிலையும் வந்திருக்கிறது, சித்தார்த்தா வுக்கு. அதன் உச்சம் தான், தற்கொலை என்ற முடிவுக்கு சித்தார்த்தாவை வழிநடத்தி உள்ளது. ஆனால் கடன் தொல்லை மட்டுமே, ஒரு சாம்ராஜ்யத்தை அசைத்து வீழ்த்தி விடுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அதுவும் கடன் அளவை விட சொத்துகள் அதிகமாக இருக்கிறபோது, கடன் தொல்லைக்காக மட்டுமே தற்கொலை என்ற முடிவுக்கு ஒருவர் போவாரா? சித்தார்த்தா எழுதியதாக கூறப்படுகிற கடிதம் உண்மை யிலேயே அவரால் எழுதப்பட்டது தானா?
இந்த சந்தேகத்தை நாம் மட்டுமே எழுப்பவில்லை. வருமான வரித்துறையும் கூட எழுப்பி இருக்கிறது. கடிதத்தில் உள்ள கையெழுத்து, சித்தார்த்தா வின் கையெழுத்து போல இல்லை;
தங்களிடம் உள்ள ஆவணங்களில் உள்ள சித்தார்த்தா வின் கையெழுத்துடன் ஒத்து போக வில்லை என்கிறது வருமான வரித்துறை. ஆனால் கடிதத்தில் இடம் பெற்றிருக்கிற வார்த்தைகள் எல்லாமே சாட்சாத், சித்தார்த்தாவின் வார்த்தைகள் போலவே தோன்றுகின்றன.
அப்படி அவரது கடிதம் தான் இது என்கிற போது, இப்படி ஒரு கடிதம் எழுதிய சித்தார்த்தாவை எப்படி குடும்பத்தினர் கண்டு கொள்ளாமல் விட்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. சித்தார்த்தா வின் மனைவி மாளவிகா, 2 மகன்கள் அமர்தியா, ஈசன் இன்னும் வாய் திறக்க வில்லை. அவர்கள் மவுன விரதத்துக்கு காரணம் என்ன?
இந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?
முடிவாய் சித்தார்த்தா வின் மாமனார் எஸ்.எம். கிருஷ்ணா கூறிய வார்த்தைகள் அர்த்தம் உள்ளவை. அவற்றை இங்கே பதிவு செய்வது பொருத்தம். “கடவுள் விளையாடுகிறார். ஏன் என்று புரிந்து கொள்வது கடினம்!”
Thanks for Your Comments