மான்செஸ்டர் : ஆஸ்திரேலிய சிறுவன் சுமார் நான்கு ஆண்டு காலம் குப்பை அள்ளி, காசு சேர்த்து அதைக் கொண்டு தன் நீண்ட நாள் ஆசையை நிறை வேற்றிக் கொண்டுள்ளான்.
அவன் கதையை கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் அவனுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து தங்களுடன் பயணிக்க வைத்தனர். அந்த சிறுவனின் ஆசை 2015இல் உதயமானது.
சிறுவனின் ஆசை
2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றது.
அதைக் கண்ட சிறுவன் மேக்ஸ் வாய்ட், இதே போல இங்கிலாந்து மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெறுவதை பார்க்க வேண்டும் என ஆசை கொண்டான்.
1500 ஆஸ்திரேலிய டாலர்
அதை தன் தந்தை டேமியனிடம் கூறி இருக்கிறான் சிறுவன் மேக்ஸ். அதற்கு அவர் 1500 ஆஸ்திரேலிய டாலர் சம்பாதித்துக் கொடுத்தால் அவனை இங்கிலாந்து அழைத்து செல்வதாக கூறி உள்ளார்.
மேக்ஸ் தீட்டிய திட்டம்
உடனே தன் தாயுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான். வார இறுதி நாட்களில் அருகே இருக்கும் வீடுகளின் குப்பையை எடுத்து செல்ல அவர்களுக்கு உதவுவது,
அதற்கு ஒரு வீட்டிற்கு ஒரு ஆஸ்திரேலிய டாலர் சம்பளம் பெற்றுக் கொள்வது என்பது தான் மேக்ஸ் தீட்டிய திட்டம்.
குப்பை அள்ளினான்
சுமார் நான்கு ஆண்டுகள் பக்கத்துக்கு வீடுகளில் வார இறுதி நாட்களில் குப்பை அள்ளி ஒரு வழியாக 1500 ஆஸ்திரேலிய டாலர் சம்பாதித்தான் மேக்ஸ்.
தான் சொன்னதை மகன் செய்த உடன், தந்தை டேமியனும் உடனடியாக குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல டிக்கெட் வாங்கினார்.
சிறப்பு அந்தஸ்து
ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெறு கிறது. அதை பார்ப்பது தான் அவர்களின் திட்டம்.
இப்படி ஒரு சிறுவன் நமக்கு ரசிகனாக இருக்கிறான் என்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி அந்த மேக்ஸ் -க்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது.
அணியுடன் பயணம்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாஹ் மற்றும் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உடன் அமர்ந்து பயணித்தான்.
ஸ்டீவ் வாஹ் அப்போது புகைப்படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பு புத்தகம்
மேலும், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான திட்டத்தை குறித்து வைக்கும் குறிப்பு புத்தகத்தை அவனிடம் அளித்து என்ன திட்டம் என்பதை பார்க்க வைத்தார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூட அதை பார்க்க முடியாது எனும் நிலையில் மேக்ஸ்-க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
பிடித்த வீரர்கள்
ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்-க்கு பிடித்த இரு வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாட் கம்மின்ஸ்.
அவர்களுடன் பேசும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்தது. அவர்களிடம் போட்டிக்கு முன் எப்படி தயார் செய்து கொள்கிறார்கள் என்பது பற்றி பேசியதாக தெரிவித்தான் மேக்ஸ்.
நெகிழ்வான சம்பவம்
நான்கு ஆண்டுகள் உழைத்து போட்டியை பார்க்க ஆசைப்பட்ட மேக்ஸ், அதையும் தாண்டி ஆஸ்திரேலிய அணியுடன் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றது உண்மையில் நெகிழ்வான சம்பவம் தான்.
Thanks for Your Comments