சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 40). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி வனிதா(30). இவர்களுக்கு தீனா என்ற திவா(14), கவுதம்(10) என 2 மகன்கள்.
இவர்களில் மூத்த மகன் தீனா, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வார விடுமுறை நாட்களில் முகலி வாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விடுவார்.
சனி, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் தீனா, முகலி வாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான தனது நண்பருடன் மொபட்டில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
திடீரென பெட்ரோல் தீர்ந்து போனதால் இருவரும் மொபட்டை தள்ளியபடி பெட்ரோல் பங்க் நோக்கி முகலிவாக்கம், தனம்நகர் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப் பட்டது. அப்போது தோண்டிய பள்ளத்தில், பூமிக்கு அடியில் தெரு விளக்கு களுக்காக புதைக்கப்பட்டு இருந்த மின்சார கேபிளை மீண்டும் சரிவர மூடாமல் சென்று விட்டனர்.
இதனால் மின்சார கேபிள் வெளியே தெரிந்தபடி இருந்தது. அந்த வழியாக சென்ற வாகனங்க ளால் அந்த மின்சார கேபிள் சேதம் அடைந்து இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் மழைநீரும் தேங்கி நின்றது.
சேதமடைந்த மின்சார கேபிளில் இருந்து மின்சாரம் கசிந்து, சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
இதை அறியாமல் அந்த வழியாக மொபட்டை தள்ளியபடி நண்பருடன் வந்த தீனா, மழைநீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர் உயிர் தப்பினார். தீனா, மின்சாரம் தாக்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாய் பேச முடியாத அவரது நண்பர், உதவிக்கு வருமாறு அந்த வழியாக சென்றவர்களை அழைத்தார்.
ஆனால் அவர் சொல்வது புரியாமல், யாரும் அதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். யாரும் உதவிக்கு வராததால் நீண்டநேரம் பரிதவித்த அவர், பின்னர் தீனாவின் பெற்றோரிடம் சென்று தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு வந்த தீனாவின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பலியான தீனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் கொடுத்தும் சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் யாரும் உடனடியாக வரவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் தீனா உடலுடன் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போரூர் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமை யிலான மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போலீசாரின் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு சமாதானம் அடைந்த பொதுமக்கள், சாலை மறியலை கை விட்டனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதை யடுத்து போலீசார், தீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தனது மகன் இறந்ததாக வும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் தீனாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பேரில் மாங்காடு போலீசார், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டல மின்வாரிய உதவி பொறியாளர் செந்தில், உதவி செயற் பொறியாளர் பாலு ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தீனா சாவுக்கு காரணமான சேதம் அடைந்த மின்சார கேபிளை நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர். மேலும் அந்த கேபிளை பள்ளம் தோண்டி மூடினர்.
இதை முன் கூட்டியே அதிகாரிகள் சரிவர செய்து இருந்தால் அநியாயமாக சிறுவன் உயிர் போய் இருக்காது என அப்பகுதி மக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.
தீனா மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதும், அவனை காப்பாற்ற வாய்பேச முடியாத அவரது நண்பர் போராடும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Thanks for Your Comments