இந்திய அணியில் சுழற் பந்து வீச்சாளராக வெற்றிகரமாக சில ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய பிரக்யான் ஓஜா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவருக்கு 33 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உள்ளூர் போட்டிகளில் கடைசியாக 2018இல் தான் ஆடினார்.
ஓஜாவின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள், அவரின் சிறந்த கிரிக்கெட் தருணங்களை பகிர்ந்து தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
24 டெஸ்ட் போட்டிகள்
பிரக்யான் ஓஜா 2009 முதல் 2013 வரை இந்திய அணியில் ஆடி வந்தார்.
அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தாலும், அப்போது தவிர்க்க முடியாத சுழற் பந்து வீச்சாளராக இருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார்.
வீழ்த்திய விக்கெட்கள்
24 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்களும், 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்களும், 6 டி20 போட்டிகளில் 10 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். இவர் பெரும்பாலும் டெஸ்ட் அணியில் தான் வாய்ப்பு பெற்றார்.
சச்சினின் கடைசி போட்டி
2013ஆம் ஆண்டு சச்சினின் கடைசி போட்டியும், அவரின் 200வது டெஸ்ட் போட்டியுமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான
டெஸ்ட் போட்டி தான் ஓஜாவின் கடைசி சர்வதேச போட்டி என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம் தான். அந்தப் போட்டியில் 10 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் அவர்.
ஐபிஎல் வெற்றி
2009இல் ஐபிஎல் கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார் ஓஜா. அதிக விக்கெட்கள் வீழ்த்தியதற் காக ஐபிஎல் தொடரின் பரப்பிள் கேப் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஆடியதே அவரின் கடைசி ஐபிஎல் பங்களிப்பு. 92 ஐபிஎல் போட்டிகளில் 89 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
பந்துவீச்சு சர்ச்சை
அவரது பந்துவீச்சு விதிக்கு மாறானது என ஒரு சர்ச்சை 2014இல் எழுந்தது. அதை மாற்றிக் கொண்ட ஓஜா 2015இல் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க அனுமதி பெற்றார்.
எனினும், அதன் பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை அத்தனை சிறப்பாக இல்லை.
உள்ளூர் போட்டிகள்
பின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அதிக அளவில் பங்கேற்று வந்த ஓஜா, ஹைதராபாத், பெங்கால் மற்றும் பீகார் அணிகளுக்காக ரஞ்சி தொடரில் ஆடி உள்ளார்.
கடைசியாக 2018இல் ரஞ்சி ட்ராபி தொடரில் பீகார் அணிக்காக அவர் ஆடியதே அவரின் கடைசி கிரிக்கெட் ஆட்டம் ஆகும்.
ஓய்வு அறிவிப்பு
இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வரும் நிலையில், பிரக்யான் ஓஜா ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் என அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Got a purple cap in ipl— im_harun_45 (@Harun_264) February 21, 2020
MoM in Sachin's last test.
One of my fav left arm spinners😭
Always overshadowed by jadeja.
நன்றி
தன் கிரிக்கெட் வாழ்வில் தனக்கு வாய்ப்பு அளித்த, உதவிய அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகள், அணிகள்,
முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்களுக்கு அவர் நன்றி கூறி இரண்டு பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அஸ்வின் - ஜடேஜா
அஸ்வின் - ஜடேஜா இந்திய அணியில் கால் பதிக்கும் முன்பே இந்திய அணியில் ஆடி வந்த பிரக்யான் ஓஜா,
அவர்களின் வரவுக்கு பின் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். மாற்று சுழற் பந்துவீச்சாளராகவே பல ஆண்டுகள் பார்க்கப்பட்டார்.
மறக்க முடியாத தருணங்கள்
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவர் தன் கடைசி டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தியதையும், சச்சினின் கடைசி டெஸ்டில் ஆடியதையும்,
ஜடேஜாவால் வாய்ப்பை இழந்ததையும், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியதையும் குறிப்பிட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.
It’s time I move on to the next phase of my life. The love and support of each and every individual will always remain with me and motivate me all the time 🙏🏼 pic.twitter.com/WoK0WfnCR7— Pragyan Ojha (@pragyanojha) February 21, 2020
மறக்க முடியாத பேட்டிங்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மொஹாலி டெஸ்ட் போட்டியில், கையில் ஒரு விக்கெட்,
வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் வலியுடன் பேட்டிங் செய்து வந்த விவிஎஸ் லக்ஷ்மனுக்கு, ஒத்துழைப்பு அளித்து, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
19 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார் ஓஜா. அது அவரின் சிறந்த பேட்டிங் தருணமாக அமைந்தது.