இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். அவர் தற்போது கிழக்கு டெல்லி தொகுதி பா. ஜனதா எம்.பியாக இருக்கிறார்.
காம்பீரின் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சரஸ்வதி பத்ரா (வயது 49) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர்.
காம்பீரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக சரஸ்வதி வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 14-ந் தேதி டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காம்பீர் ஏற்றுக் கொண்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 21-ந் தேதி இறந்தார்.
இதை யடுத்து ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தி னருக்கு காம்பீர் தகவல் கொடுத்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சரஸ்வதி உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
அவரது குடும்பத்தினரும் டெல்லிக்குவர முடியவில்லை. இதனால் காம்பீரே இறுதிச் சடங்கு செய்யுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்று காம்பீர் தனது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கு அவரது வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்தார்.
அவரது இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி உள்ளனர். மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானும் காம்பீரை பாராட்டி யுள்ளார்.