காலங்கள் நிறைய மாறி விட்டன. இந்த பத்து வருடங்களில் நம் சுற்றுச்சூழலில், பழக்க வழக்கத்தில் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.
குடும்பங்கள் எல்லாம் கூட்டுக்குடும்பமாக ஒரு வீட்டில் ஒன்றாக ஏழு எட்டு குழந்தைகள் வளர்ந்த சூழ்நிலையில் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி நினைக்க அவ்வளவாக யாருக்கும் நேரமில்லை.
பெரிய குழந்தைகள், சிறு குழந்தைகளை பார்த்து கொண்டு விடுவார்கள். நம்மில் கூட பலர் வீட்டில் அப்பா, அம்மாவை விட சகோதர சகோதரிகளையே பெற்றோர்களாக பாவிக்கும் பழக்கமும் இருந்தது.
ஆனால் இன்றோ ஒவ்வொரு குடும்பங்களிலும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மற்றும் இன்று வசதி வாய்ப்பு அதிகரித்து
நம் அனைத்து வேலைகளுக்கும், இயந்திரங்கள் வந்து விட்டதால் குழந்தைகளை பார்த்து கொள்வதே மிகப்பெரிய வேலையாக அமைந்து விட்டது.
இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மாற்றம் இன்று குழந்தைகளைச் சுற்றியே உலகம் என்று அமைந்து விட்டது.
குழந்தைகளுக்காகவே வீடுகள், பள்ளிகள், கடைகள், விளம்பரங்கள் என்று வந்துவிட்டன. இதனால் அவர்கள் சொல்வது மட்டுமே இங்கு நடக்கின்றது.
இந்த சூழ்நிலையில் மருத்துவர்களாகிய நாங்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய கேள்வி என் குழந்தை சாப்பிடுவதே இல்லையே- இது எதுவும் நோயின் அறிகுறியா?
இந்த கேள்வி எங்களிடம் கேட்கப்படும் போது நாங்கள் முதலில் செய்வது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்று பார்ப்பது. பெரும்பாலும் அப்படிப்பட்ட குழந்தைகள் சீரான வளர்ச்சி பாதையில் இருப்பார்கள்.
பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருந்தாலும் இவர்களின் வளர்ச்சி, அவர்கள் வயதிற்கு சரியான அளவிலோ அல்லது அவர்களின் பெற்றோர்களின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப சரியான அளவிலோ தான் இருக்கும்.
மேலும், நாங்கள் குழந்தைகள் சாப்பிடவில்லை என்று பெற்றோர் ரத்த பரிசோதனை செய்ய சொல்வதால் பண்ணும் போது ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே ரத்தசோகை அல்லது கால்சியம் (Calcium) சத்து குறைபாடு இருக்கும்.
மற்றவர்களுக்கு அனைத்து பரிசோதனையும் சாதாரணமாகவே எந்த குறைபாடும் இன்றி இருக்கும்.
சரி இப்படி எல்லாமே நன்றாக இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகள் ஏன் சாப்பிடுவதில்லை என்ற காரணத்தை பார்த்தால், மேற்கூறிய மாற்றங்களே காரணம்.
1. குழந்தைகள் முதல் வயது முதல் 8 வயது வரை எடை குறைவாகவே இருப்பார்கள். வளர்ச்சி அதிகம் இருக்கும். மூன்று பருவங்கள் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் போது, குழந்தை பிறந்தவுடன் முதல் வருடம் மற்றும் 9 வயதிற்கு மேல் உள்ள வளர் இளம்பருவம்.
இந்த மூன்று பருவங்களில் தேவைப்படும் உணவு அளவு வேறு எப்போதும் தேவைப்படுவதில்லை. வயிற்றில் உணவு முழுவதுமாக இருக்கும் போது தூக்கம் வரும்.
முதல் வயதிற்குப் பிறகு குழந்தைகள் நிறைய கற்று கொள்ள ஆரம்பிக்கிறார்கள். செயல்பாடுகள் அதிகமாகிறது. ஆகவே உணவை குறைத்தால் தான் மூளை சுறுசுறுப்பு அடையும். இது இயற்கை செய்யும் அற்புதம்.
2. இந்த அற்புதத்தை புரிந்து கொள்ளாமல் மேற்கூறிய குடும்பச் சூழ்நிலையில் அனைவரின் கவனமும் ஒரு குழந்தையிடமிருந்து இருக்கும் போது இந்த பிரச்சினை பெரிதாக ஆகி விடுகிறது.
பெற்றோர் மாற்றி தாத்தா, பாட்டி அனைவரும் கவலைப்பட்டு நோயே இல்லாத சூழ்நிலையிலும் நாம் நோய் இருப்பதாக நினைத்து கொள்கிறோம். சாப்பிடும் வேளைகள், சண்டை வேளைகள் ஆகி விடுகிறது.
3. குழந்தைகள் இந்த சூழ்நிலையில் இரண்டு பிற மனநிலைக்கு உள்ளாகிறார்கள்.
* ஒன்று அனைவரின் பார்வையும் அவரிடத்தே இருப்பது அவர்களுக்கு தங்களுக்கு தேவை யானவற்றை வாங்கி கொள்ள மற்றும் செய்து கொள்ள உதவுகிறது.
* இரண்டு தங்களின் ஆழ்மனதில் உணவு மீது ஒருவித அதிருப்தியை உண்டாக்கி கொள்கிறார்கள்.
4. 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இன்று விளையாடுவதில் ஆர்வம் கொள்ளாமல், கைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும், I-Pad -லும் நேரத்தை செலவழிப்பதால் அவர்களின் ஜீரணம் மந்தமாகவே உள்ளது.
மாலை முழுவதும் விளையாட்டு என்று சொன்ன வாக்கு மாறி, மாலை முழுவதும் Cellphone என்றாகி விட்டது.
விளையாட வெளியில் செல்ல முடியவில்லை, நிறைய பயம், வாகனங்கள் என்று மாறிமாறி சூழ்நிலையின் காரணமாகவோ, அல்லது படிப்பின் சுமையாகவோ விளையாட்டு பின்னடைவு அடைந்துள்ளது.
ஆக, குழந்தைகளின் இயல்பான உடல் மாற்றம் மற்றும் இன்றைய குடும்ப சூழலே குழந்தை சாப்பிடுவதே இல்லை என்கின்ற இந்த நிலைக்கு காரணம். இதற்கான தீர்வு அனைவரிடத்திலும் உள்ளது.
* மருத்துவர்கள் இதற்கு வெறும் மருந்துகள் எழுதாமல், குழந்தைகளிடத்து வேறு ஏதேனும் நோய் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
* பள்ளிகள் மற்றும் சமுதாயம் குழந்தைகள் விளையாட சூழ்நிலை ஏற்படுத்தி தரவேண்டும்.
* பெற்றோர்கள் இயல்பான வளர்ச்சியையும் புரிந்து கொண்டு, வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்தி, அலைபேசி மற்றும் தொலைக்காட்சியின் பயன்பாட்டை குறைந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
என் குழந்தை சாப்பிடுவதே இல்லை என்பது நோயின் அறிகுறி அல்ல...
இது நம் சமுதாயத்தின் தேவையில்லா மாற்றத்தின் அறிகுறி.
பெற்றோர்கள் தங்கள் வளர்ப்பினை மாற்ற வேண்டிய தருணத்திற்கான அறிகுறி எது இயல்பு என்று தெரிந்து கொண்டு அனைத்துக்கும் பதட்டப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டிய சூழலுக்கான அறிகுறி...
குழந்தைகள் நாட்டின் கண்கள் நாளைய இந்தியா வளமாக இருக்க சிந்திப்போம்... செயல்படுவோம்.
நோயை தீர்ப்பது மட்டுமே எங்களின் நோக்கம் அல்ல..
அனைவரையும் நலமோடு வாழவைப்பதே நலம் மருத்துவ மனையின் முயற்சி.
- Dr.நர்மதா அசோக், இயக்குநர், குழந்தை நல மருத்துவர்... மாலை மலர்