மூன்றாவது மாடிக்கு படிக்கட்டில் நடந்து போவதற்குள்ளே பலருக்கு மூச்சு வாங்கும் நிலையில், 3139 படிக்கட்டுகளை கால் தரையில் படாமல் தனது சைக்கிளாலேயே ஏறி,
புதிய உலக சாதனை படைத்துள்ளார் போலந்து நாட்டின் சைக்கிள் வீரரான கிறிஸ்டியன்
ஹெர்பா.தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள பிரசித்தி பெற்ற 101 டவரில் இந்த உலக சாதனையை நிகழ்த்திய கிறிஸ்டியன் ஒரு துள்ளலுக்கு ஒரு படி என்று,
சைக்கிள் மற்றும் தனது சொந்த உடலின் எடையை ஒவ்வொரு துள்ளலின் போதும் சுமந்தபடி, ஒவ்வொரு படியாக ஏறத் தொடங்கினார்.
சிறிதும் சோர்வடையாமல் ஒவ்வொரு படியாக ஏறி டவரின் உச்சியில் உள்ள 3139 படியை அடைந்த போது,
அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ஹெர்பாவை உற்சாகமாக வரவேற்றனர்.
கிறிஸ்டியன் ஹெர்பா 2 மணி நேரம், 13 நிமிடங்களில் 3139 படிகளை ஏறியதாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த சாதனை குறித்து 33 வயதான ஹெப்ரா கூறுகையில் கடந்த வருடம் மெல்போர்னில் 2,919 படிகளை ஏறி நான் படைத்த உலக சாதனையை நானே முறியடிக்க வேண்டுமென நினைத்தேன்.
இன்று முறியடித்து விட்டேன் என்று தம்ஸ் அப் காட்டுகிறார். உயர் நிலைப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக ஹெப்ரா பணியாற்றி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது