மீத்தேன் அரக்கன்! காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்

பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார்.
பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது.

மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.

கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது.

தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள்.

திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன. மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன? மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது.

இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது.

அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு.

இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு! பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது.

இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.
இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன. காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.

முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

 ''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன.

ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும். இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும்.

பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர்.
இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும். நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும்.

மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள்.

இதுதான் அவர்களின் திட்டம்! உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம்.

ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக் கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன.

அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.

வெளிநாடுகளில் என்ன நடக்கிறது? மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது! அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர்.

ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர்.

ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.

அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது.

தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது.

ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது! மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது... ''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம் பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators).

ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது.

ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.

காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு? இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு. ''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள்.

ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும்.

விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால், 35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும்.

ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம். மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர்.

அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால் தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.

திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன.

ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? '

இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை.
இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
Tags:
Privacy and cookie settings