நாம் இன்டர்நெட்டில் உலவும் போது நமக்கு பெரிதும் உதவுவது புக்மார்க் என்ற ஒரு ஆப்ஷன். இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க். ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல்,
இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.
குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப்பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் பிரவுசரில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
புக்மார்க்குகளுக்கான பேக் அப் பைல் சிறிய, மறைத்துவைக்கப்பட்ட பைலாக குரோம் பிரவுசரில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும்.
இந்த பைல் அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரில் இது மிக எளிது. பயர்பாக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில்,
அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு “undo” வசதி தரப்பட்டுள்ளது. பிரவுசரும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பேக் அப் செய்கிறது.
இந்த பேக் அப் பைலைப் பல நாட்கள் பயர்பாக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.
மறைக்கப் பட்ட போல்டர்களைத் தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை. குரோம் பிரவுசரின் புக்மார்க் மேனேஜரில் “undo” ஆப்ஷன் இல்லை .
ஏதாவது முறையில் ஏடாகூடமாக, உங்கள் விரல் நழுவி புக்மார்க்குகள் உள்ள போல்டரை அழித்து விட்டால், அவற்றை மீட்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பேக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து மீண்டும் பெறலாம்.
ஆனால் இந்த பேக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது. குரோம் பிரவுசர் உங்கள் புக்மார்க் பைலினை ஒரே ஒரு பேக் அப் பைலாக பராமரிக்கிறது.
ஒவ்வொரு முறை குரோம் பிரவுசரை இயக்கும் போதும் அது, அந்த பேக் அப்பைலை மீண்டும் எழுதிக் கொள்கிறது.
எனவே புக்மார்க் பைல் உள்ள போல்டரை அழித்து விட்டால், குரோம் பிரவுசரை மூடக் கூடாது.
மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பேக் அப் பைலில், புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.
C:\Users\NAME\AppData\Local\Google\Chrome\User Data\Default இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் பைல் இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது
(Bookmarks.bak) அண்மைக் காலத்திய பேக் அப் பைல். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.
இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு பைல்கள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.
இந்தக் குழப்பத்தினை நீக்க, Organize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் “Folder and search options.” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Hide extensions for known file types” என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.
இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில், இறுதியாக உருவாக்கப்பட்ட பேக் அப் பைல், அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.
இந்த பேக் அப் பைலை மீட்டுக் கொண்டு வர, குரோம் பிரவுசரின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் பிரவுசர் மூடப்பட்ட நிலையில், Bookmarks பைலை அழிக்கவும்.
Bookmarks.bak என்ற பைலை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் பிரவுசரை இயக்கி னால், நீங்கள் அழித்த புக்மார்க் பைலைக் காணலாம்.
நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கியபோது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது.