இரண்டு வயதில் மீசை, தாடி வளர்ந்த ஆண் குழந்தை !

தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கு திடீர் ஹார்மோன் மாற்றத்தால், உடல் உறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகின. குறிப்பாக பெரியவர்களை போல் தாடி, மீசை மற்றும் உடல் முழுவதும் முடி வளர்வதும் தென்பட்டது.
மழலை பருவத்திலேயே இத்தகைய மாற்றங்களை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவனை, பெற்றோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஹார்மோன் துறை உதவி பேராசிரியர் டாக்டர் சதீஷ் பரிசோதனை செய்தபோது, அவனது உடலில் ஹார்மோன்கள் மிகவும் அதிக அளவில் இருந்தது.

ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹார்மோன்களின் தலைமையிடமான ஹைப்போத்தாலமசில் ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது.

முதலில் அவனுக்கு ஹார்மோன்களை கட்டுப்படுத்த 3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு மருந்துகள் ஊசி மூலம் செலுத்தினர். ஆனால் அது அவனுக்கு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

மேலும், அந்த மருந்து இன்னும் 10 முதல் 12 வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த மருந்தின் விலை மிக அதிகம். இதனால், அதை வாங்க முடியாமல் குழந்தையின் பெற்றோர் அவதிப்பட்டனர்.

 இதனை தொடர்ந்து, அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஜிப்மர் மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் ரூபேஷ்குமார் தலைமையிலான குழுவினர், மூளையின் அடிப்பகுதியில் உள்ள அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் கடந்த வாரம் அகற்றினர்.

இதன்பிறகு அவனது ஹார்மோன் அளவு வயதுக்கு ஏற்ப சரியாக காணப்படுகிறது. இனி அவனுக்கு ஊசி மருந்து தேவைப்படாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings