ஜேர்மனி நாட்டை சேர்ந்த ராணுவ துணை தளபதி ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியான 102 அப்பாவி மக்கள் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜேர்மனி நாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 2009ம் ஆண்டு வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு இருந்தது.
ஆப்கானிஸ்தானின் Kunduz நடைப்பெற்ற இந்த தாக்குதலின்போது ஜேர்மனி ராணுவத்திற்கு சொந்தமான இரண்டு அபாயகரமான எரிபொருள் டாங்கர்களை ஆப்கான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
பெருத்த சேதத்தை விளைவிக்கும் அந்த எரிபொருள் டாங்கர்களை ஜேர்மனி ராணுவ வீரர்களுக்கு மத்தியில் வெடிக்க வைக்க
தீவிரவாதிகள் திட்டமிடுவதாக ஜேர்மனி ராணுவத்தின் துணை தளபதியான Georg Klein என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அபாயத்தை உணர்ந்த துணைத்தளபதி, எரிபொருள் டாங்கர்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், வான்வழி தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் அந்த எரிபொருள் டாங்கர்களிலிருந்து அப்பகுதி மக்கள் சமையல் எரிவாயுவை பிரித்தெடுத்துக்கொண்டிருந்தனர்.
இதனை அறியாத ஜேர்மனி ராணுவ வீரர்கள் அந்த டாங்கர்கள் மீது குண்டு மழை பொழிய, டாங்கர்கள் வெடித்து சிதறி சுற்றியிருந்த அத்தனை அப்பாவி மக்களையும் பலி வாங்கியது.
இந்த சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்ப இந்த வழக்கு ஜேர்மனி நீதிமன்றத்திற்கு வந்த போது,
டாங்கர்களுக்கு அருகில் இருந்தவர்கள் தீவிரவாதிகள் என்று கருதி தான் குண்டு வீசினோம் என ராணுவ துணை தளபதி விளக்கம் அளித்தார்.
பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 2010ம் ஆண்டு இந்த வழக்கில் துணை தளபதி மீது தவறு இல்லை எனக்கூறி தீர்ப்பளிக்கப்பட்டு வழக்கு மூடப்பட்டது.
இருப்பினும், இந்த தாக்குதலில் இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தை ஒருவர், துணை தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல் முறையீடு வழக்கு ஜேர்மனியின் Karlsruhe நகரில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு நேற்று வந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதியும் ‘துணை தளபதியின் உண்மையான நோக்கம் அப்பாவி மக்களை கொல்வது அல்ல’ என்பது நிரூபனம் ஆவதால்,
இந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்றும், துணை தளபதி மீது வழக்க தொடுக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
எனினும், இந்த தீர்ப்பில் திருப்தி அடையாத மனுதாரரின் வழக்கறிஞரான Karim Popal என்பவர், இந்த வழக்கை ஐ.நா மன்றத்தில் முறையிட்டு நீதி பெறுவேன் என கூறியுள்ளார்.