ஆஸ்திரேலியா வில் மிகவும் டைட்டான ஜீன்சை அணிந்தி ருந்ததால், காலில் இரண்டு நரம்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் பேஷன் பிரியை ஒருவர்.
ஆஸ்திரேலியாவின் அடிலைடைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவர் பேஷன் பிரியையாம்.
விதவிதமான ஆடைகள் அணிவதில் விருப்பம் கொண்ட அப்பெண், சம்பவத்தன்று மிகவும் டைட்டான ஜீன்ஸ் ஒன்றை அணிந்துள்ளார்.
நாள் முழுவதும் தனது காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தாலும், அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாக இருந்துள்ளார் அவர்.
மாலை நேரத்தில் அருகில் இருந்த பூங்கா ஒன்றில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவரது கால் பலமில்லாதது போல் இருந்துள்ளது.
திடீரென நடக்க இயலாமல் அப்படியே சரிந்து கீழே அமர்ந்து விட்டார். மயக்கம் ஏதும் வராமல் திடீரென கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உதவிக்காக அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
பின்னர் அவர்களின் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது காலில் இருந்த பேண்ட்டை அகற்ற முடியாமல் சிரமப்பட்ட மருத்துவர்கள், பின்னர் அவற்றை கத்தரி கொண்டு கத்தரித்து எடுத்துள்ளனர்.
அப்போது தான் அவரது கால் முழுவதும் வீங்கிப் போய் இருந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவரது கால் நரம்புகள் இரண்டு சேதமடைந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் அவர்.
உடலைக் கவ்வுவது போன்ற ஆடைகள் அணிவதால் நரம்புகளில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இவ்வாறு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.