வலங்கைமான் அருகே வீடு எரிந்து சிறுவர்- சிறுமிகள் படுகாயம் !

வலங்கைமான் அருகே 3 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்- சிறுமிகளுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலங்கைமான் அருகே வீடு எரிந்து சிறுவர்- சிறுமிகள் படுகாயம்  !
தீ விபத்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பூந்தோட்டம் சாத்தனூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தர்மதுரை. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். 

நேற்று மதியம் 12.30 மணி அளவில் இப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் தர்மதுரையின் கூரை வீட்டுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி கிளம்பியது. 

இதன் காரணமாக தர்மதுரையின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி அருகே இருந்த குமார், மாரியம்மாள் ஆகியோரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. 

அடுத்தடுத்து இருந்த 3 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

படுகாயம்
தீ விபத்தில் வீடுகளில் விளையாடி கொண்டிருந்த தர்மதுரையின் மகள்கள் தமிழரசி (வயது4), காவ்யா (3), குமாரின் மகன்கள் அபி (4), புகழேந்தி (3), 

 மாரியம்மாளின் பேத்தி யாழினி (7), பேரன் நித்திஸ் (3) ஆகிய 6 சிறுவர்கள் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர்.

இதில் தர்ம துரையின் மகள் காவ்யா தீயில் கருகி ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை 108 ஆம்புலன்சு வேன் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கு அளிக்கப்பட்ட முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் காவ்யா தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை போல தீயில் கருகிய மற்ற சிறுவர்கள் தமிழரசி, அபி, புகழேந்தி, யாழினி, நித்திஸ் ஆகிய 5 பேருக்கும் நீடாமங்கலம் அரசு மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து 5 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அதிகாரி கலியமூர்த்தி தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். 

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம் ஆறுதல் கூறினார்.

அப்போது ஒன்றிய ஆணையர் தில்லை நடராஜன், சமூக திட்ட தனி தாசில்தார் மலர்மன்னன் ஆகியோர் உடன் இருந்தனர். தீ விபத்து குறித்து அரித்துவார மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:
Privacy and cookie settings