85 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்குடி குருபகவான் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
குருபகவான் கோவில் தேரோட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். குருபகவான் எழுந்தருளி வலம் வரும் தேர் பழுதடைந்து இருந்ததன் காரணமாக கடந்த 85 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவில்லை.
தற்காலிகமாக சப்பரம் அமைக்கப்பட்டு அதில் குருபகவான் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இதையடுத்து ஆபத்சகாயேசுவரர் கோவிலில் குருபகவானுக்குரிய தேரை புதிதாக வடிவமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ரூ.27 லட்சம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.
இந்த தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி நடைபெற்றது.
85 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இதில் குருபகவான் 85 ஆண்டுகளுக்கு பிறகு தேரில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தார். முன்னதாக காலை 8.30 மணி அளவில் குருதெட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடி அசைத்து விழாவை தொடங்கி வைத்தார். கல்விக்குடி சின்னதுரை மழவராயர் குடும்பத்தினர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சரின் மனைவி லதாமகேஸ்வரிகாமராஜ், அறநிலைய உதவி ஆணையரும், செயல் அதிகாரியுமான சாத்தையா, தஞ்சை மத்திய வங்கி கூட்டுறவு வங்கி துணை தலைவர் சங்கர்,
வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி, துணை தலைவர் குருமூர்த்தி, ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமிஅழகுமுத்து, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராணிதுரைராஜ்,
ஆலங்குடி தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் கார்த்திபன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் நாராயணசாமி, நடராஜன், கூடுதல் ஆணையர் தில்லைநடராஜன் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
தேராட்டத்தையொட்டி கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிசேக, ஆராதனைகள் மற்றும் யாகங்கள் நடந்தன.
விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் போலீசார் செய்து இருந்தனர்.