20 தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் கொடூரமாக சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்து வந்த விரிவுரையாளர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை கடந்த 7 ம் தேதி அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தபோது, அவர்கள் தங்களை தாக்கியதாகவும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்றும் திட்டமிட்டே தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் என்கவுன்ட்டரில் இறந்தவர்களில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்ட த்தையும் 8 பேர் விழுப்புரம் மாவட்ட த்தையும் 4 பேர் வேலூர் மாவட்ட த்தையும் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியர் அருண்குமார் (27) தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவண்ணா மலை போளூரை சேர்ந்த இவர் எம் இ படித்துள்ளார். ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி சென்னை வளசரவாக் கத்தில் வசித்து வருகிறார்.
தமிழர்கள் திட்டமிட்டே கொல்லப்பட்டனர் என்று கூறி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார் அருண் குமார்.