‘ஓவர் ஸ்பீடில்’ வந்த துணை முதல் மந்திரியின் கார் !

டெல்லியின் முக்கிய சாலை வழியாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிவேகமாக வந்த துணை முதல் மந்திரியின் காரை மடக்கிப் பிடித்த போக்குவரத்து போலீசார் 400 ரூபாய் அபராதம் விதித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வடகிழக்கு டெல்லி பகுதி போலீசார் கடந்த 12-ம் தேதி வழக்கம்போல் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கார் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிவேகமாக கடந்து சென்றதை கவனித்த ஒரு போலீஸ் அதிகாரி, அந்த காரை மடக்கிப் பிடிக்குமாறு தனது ‘வாக்கி டாக்கி’ மூலம் தகவல் அளித்தார்.

இதனையடுத்து, கஜுரி காஸ் சவுக் சிக்னல் சந்திப்பில் அந்த காரை மடக்கிப் பிடித்த போலீசார், காரினுள் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா அமர்ந்திருப்பதை கண்டனர்.

அவருக்குண்டான மரியாதையை செலுத்திய பின்னர், ‘ஓவர் ஸ்பீடிங்’ சட்டமீறலுக்கான அபராத ரசீதை மணிஷ் சிசோடியாவின் டிரைவரிடம் போலீசார் அளித்தனர்.

ரசீதை பெற்றுக்கொண்ட டிரைவர் 400 ரூபாய் அபராதம் செலுத்தியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
Tags:
Privacy and cookie settings