குவோரா இணையம் ஜாக்கிரதை !

கேள்வி பதில் தளமான குவோராவில் http://www.quora.com/ எதைக் கேட்டாலும் பதில் கிடைக்கும். 
குவோரா இணையம் ஜாக்கிரதை !
ஆனாலும் கூட, எந்த வேலையில் சேரலாம் என குவோராவில் ஆலோசனை கேட்பது புத்திசாலித்தனமல்ல. 

அமெரிக்க இளம் பொறியாளர் ஒருவர் பெரும் விலை கொடுத்து இதைக் கற்றுக் கொண்டிருக்கிறார். 

அந்தப் பொறியாளருக்கு உபெர், ஜெனிபிட்ஸ் என இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வேலைக்கான அழைப்பு வந்திருக்கிறது. 

உபெர் கோடிக்கணக்கில் சந்தை மதிப்பு கொண்ட ரைட் ஷேரிங் செயலி நிறுவனம். 

ஜெனிபிட்ஸ் ஸ்டார்ட்டப் ரகத்தைச் சேர்ந்தது. இரண்டில் எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வது எனப் பொறியாளருக்குக் குழப்பம். 

இந்தக் குழப்பத்தை குவோரா தளத்தில் விளக்கி ஆலோசனை கேட்டிருந்தார். உபெர் மதிப்புமிக்க நிறுவனம், ஜெனிபிட்ஸ் அப்படி அல்ல எனக் கூறியிருந்தவர், 
உபெரில் வேலை பார்த்தால் பின்னாளில் கூகுள் அல்லது ஆப்பிள் நிறுவனங்களுக்குத் தாவிவிட முடியும் என்றும் தனது எண்ணங்களைத் தெரிவித்திருந்தார். 

குழப்பத்தை குவோரா பயனாளிகள் தீர்த்து வைப்பார் எனக் காத்திருந்தார். ஆனால், குவோரா சாதாரண கேள்வி பதில் தளம் அல்ல. 

பல நேரங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்களே கூடக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைப் பார்க்கலாம். 

பொறியாளர் விஷயத்திலும் இது தான் நடந்தது. அவரது வேலை குழப்பத்துக்கு ஜெனிபிட்ஸ் நிறுவன சி.இ.ஓ., இணை நிறுவனரான பார்கர் கொனார்டே பதில் அளித்திருந்தார். 
நிச்சயமாக ஜெனிபிடிசில் சேர வேண்டாம், சேரவும் முடியாது, ஏனெனில் உங்கள் வேலைக்கான அழைப்பைத் திரும்ப பெற இருக்கிறோம் என்பது போல சற்றே காரமாகப் பதில் கூறியிருந்தார். 

இந்தச் சம்பவம் உணர்த்தும் நீதி, புதிய வேலை பற்றிய எண்ணங்களை இணையத்தில் பகிர்ந்தால் ‘பல்ப்’ வாங்க வேண்டி யிருக்கலாம்.
Tags:
Privacy and cookie settings