மாணவிக்கு போடப்பட்ட தவறான ஊசி : ஒவ்வாமையினால் சிதைவுண்ட முகம்..!

சென்னை பரங்கிமலை முத்துரங்க முதலி தெருவை சேர்ந்த கோசலைராமன் (40), துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

மாணவிக்கு போடப்பட்ட தவறான

இவரது மனைவி சரஸ்வதி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் சர்மிளா (18) தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், அவருக்கு கடந்த மாதம் 22-ம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு சென்றுவந்தும் காய்ச்சல் குறையாததால், மறுநாள் அதே பகுதியில் உள்ள வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் சர்மிளாவுக்கு ஊசி போட்டுள்ளார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து சர்மிளாவுக்கு அலர்ஜி காரணமாக உடல் முழுவதும் தோல் உரிய தொடங்கியுள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் 29ம் திகதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சர்மிளாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பற்றி மருத்துவர்கள் கூறுகையில், சர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வாமை பற்றிய ஆய்வின் முதல் கட்ட பரிசோதனையில் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பது தெரிந்தது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊசி போட்டுள்ளோம்.

தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 ஊசிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவருக்கு போடப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் அவரது உடல்நிலை சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

சர்மிளாவின் தந்தை கோசலைராமன் மகளின் நிலைமைக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரங்கி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்தப் புகாரின்பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings