பொருளாதாரமா? அல்லது சமூகமா?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக நடைபெற்று வரும் விவாதம் மிகமிக மேலோட்டமாக உள்ளது.
ஓர் ஆழமான, பகுத்தறிவுக்கு முற்றிலும் ஏற்புடைய விவாதத்திற்கு  இருதரப்பு சார்ந்த

அடிப்படையான ஆழமான கண்ணோட்டங் களை புரிந்து கொள்வது இன்றியமை யாததாகும்.

பாரம்பரியமாக நம் நாட்டில் நடத்தப்பட்டு வரும் சில்லறை வர்த்தகம் தொடர்பான சில அடிப்படை உண்மைகளைக் காண்போம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் இவற்றை நடத்தி வருகிறார்கள். விற்பவருக்கும் வாங்கு பவருக்கும் இடையே நல்ல அறிமுகம் உள்ளது.

அண்டை அயலார் சார்ந்த பரிவர்த்தனையாக இது உள்ளது. உறவு சார்ந்த வர்த்தக செயல்பாடாக இது உள்ளது.

நம் நாட்டில் சுமார் 1.5 கோடி சில்லறை வியாபாரிகள் உள்ளனர். நடை பாதைகளில் விற்பவர்கள், தள்ளு வண்டிகளில் விற்பவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். 

உலகிலேயே சில்லறை வியாபாரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இங்குதான் உள்ளனர். 8 இந்தியர்களில் ஒருவர் சில்லறை வியாபாரியாக உள்ளார். 

ஆனால் இந்தியாவை விட அதிக ஜனத்தொகையைக் கொண்டுள்ள சீனாவில் இந்த அளவுக்கு சில்லறை வியாபாரிகள் இல்லை.

அங்கு வெறும் 13 லட்சம் சில்லறை வியாபாரிகள் தான் உள்ளனர். சீனாவில் 100 பேரில் ஒருவர்தான் சில்லறை வியாபாரியாக உள்ளார்.

ஒரு சில்லறை வியாபாரியால் நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களையும் இருப்பு வைக்க முடியாது.

இதனால் தான் நிறைய சில்லறை வியாபாரிகள் உள்ளனர். நடைபாதை வியாபாரிகள், தெருத் தெருவாக நடந்து சென்று விற்பவர்கள்,

தள்ளுவண்டி வியாபாரிகள், தெருக்களில் சின்னஞ்சிறு கடை வைத்திருப்ப வர்கள், மளிகைக்   கடைகள் போன்றயாவும் சில்லறை வர்த்தகத்தின் கீழ் வருகின்றன.


இவர்கள் அனைவரும் சேர்ந்து நுகர்வோரின் தேவைகளைப்  பூர்த்தி செய்கின்றனர்.

இந்திய சில்லறை வியாபாரத்தின் மதிப்பு சற்றேறக் குறைய 40 ஆயிரம் கோடி டாலர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 

இதில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு வெறும் 5% மட்டுமே. எஞ்சிய 95% சிறு வியாபாரிகள் வசமே உள்ளது.

நம் நாட்டில் சில்லறை வியாபாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இதே முறைப்படித் தான் நடைபெற்று வந்துள்ளது. 

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், வேளாண்மை மற்றும் உணவு பொருள் வியாபாரத்தின் பங்கு 

மொத்த சில்லறை வியாபாரத்தில் 63% ஆகும். 7.4 கோடி சிறு வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள், குறு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கூட்டு செயல்பாடு இங்கு உள்ளது. 

இது பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களிடையே நெருக்கமான உறவு உள்ளது.

இந்தியாவில் உள்ள 6.8 லட்சம் கிராமங்களில் 5.88 கோடி குறு மற்றும் சிறு விவசாயிகள் உள்ளனர்.

அவர்கள் 47 ஆயிரம் சந்தைகளில் உள்ள ஒன்றரை கோடி மொத்த வியாபாரிகள்  மற்றும் சிறு வியாபாரிகளிடம் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

உலகிலேயே மிகவும் பரவலாக்கப் பட்டுள்ள மிகப்பெரிய வியாபாரம் இதுதான்.

இருப்பினும் 40% விளை பொருள் தான் இவ்வாறு வியாபாரம் செய்யப் படுகிறது. 

மீதமுள்ள 60% பண்டமாற்று முறையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர் களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இந்த 60% பகிர்வு மற்றும் 40% விற்பனைதான் கிராமிய இந்தியாவை உயிர்த்துடிப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.  

சில்லறை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு குறித்து ஆய்வு நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் (ஜூன் 2009) பாரம்பரியமாக

உள்ள சில்லறை விற்பனையில் 4 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. 

கார்ப்பரேட்டுகள் நடத்தும் சிறு வியாபாரத்தில் 20 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் தவறானது என்பதையும் நிலைகுழு சுட்டிக் காட்டியுள்ளது. 

நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது சரிதான். உலகம் முழுவதும் 42,200 கோடி வியாபாரம் நடத்துகின்ற வால்மார்ட் நிறுவனத்தில் 21 லட்சம் பேரே பணியாற்றி வருகின்றனர்.  

இந்தியாவில் சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள வர்களில் 5%த்திற்கும் குறைவான வர்களுக்கே கார்ப்பரேட் நிறுவனங்களால் வேலை வாய்ப்பை வழங்க முடியும். 

எனவே நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட சிறுவணிகத்தில்,  ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களில்

20ல் ஒருவருக்குத் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். 

ஒரு கோடி பேருக்கு சில்லறை வியாபாரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற புள்ளிவிவரத்தை வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா எங்கிருந்து பெற்றார்?

அவர் எவ்வாறு கணக்குப் போட்டு இதை தெரிவித்தார்? சில்லறை வர்த்தகத்தில் நேரடி

அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் நான்கு காரணங்களை அடுக்குகிறார்கள்.

1) சில்லறை வியாபாரம் நிறுவன ரீதியாக கட்டமைக் கப்படுமானால் இப்போது வீணாகக் கூடிய ரூ.50,௦௦௦ கோடி மதிப்புள்ள

வேளாண் பொருட்கள் செம்மையான முறையில் பாதுகாக்கப்படும். சேதாரம் தவிற்கப்படும். 

2)  இடைத் தரகர்கள் ஒழிக்கப் படுவார்கள். விவசாயிகளின் விலை பொருட்களுக்கு  நல்ல விலை கிடைக்கும்.

3)  வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் வேளாண் விளை பொருட்களை வாங்கி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். சீனாவில் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

சில்லறை வியாபாரிகளால் இவ்வாறு கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.

4) வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.முதலாவதாக வேலை வாய்ப்பு குறித்து கூறப்படுவது அபத்தமானது, அடிப்படை யற்றது.

உலகில் வேறு எந்த நாட்டிலும் வால்மார்ட்டோ அல்லது டெஸ்கோவோ இந்த அளவுக்கு வேலை வாய்ப்பை உயர்த்த வில்லை.

எனவே இங்கும் வேலை வாய்ப்பு உயர வாய்ப்பில்லை.

இரண்டாவதாக சீனாவில் செய்து வருவதைப் போல வால்மார்ட்டும் டெஸ்கோவும் பொருட்களை கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. 

இந்தியப் பொருளாதரமும் சீனப் பொருதாரமும் வெவ்வேறானவை.

சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகர்வு 35% மட்டுமே. எனவே அங்கு ஏற்றுமதிக்காக உள்ள உபரியின் அளவு 65% ஆகும்.

இது பல பத்தாண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58% உள்நாட்டு நுகர்வுக்குச் சென்று விடுகிறது. 

ஏற்றுமதி உபரி என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு இல்லை.

எனவே வால்மார்ட் இங்கு கால்பதித்தால் சீனாவி லிருந்து குறைந்த விலையில் பொருட்களை கொண்டு வந்து குவிக்கும்.  

ஏற்கனவே சீனப் பொருட்கள் இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு தற்போது 2000 கோடி டாலராக உள்ளது.


2014ல் இது 27850 கோடி டாலராக உயர்ந்து விடும். இந்தியா வளர்ச்சி யடையாது.

மாறாக வால்மார்ட்டும் டெஸ்கோவும் இந்தியாவின் தரித்திரத்தை விஸ்வரூபப் படுத்தி விடும்.  

இடைத் தரகர்களை ஒழித்து விடும். விவசாயிகளின் செழிப்பை அதிகரிக்கும் என்று வால்மார்ட் குறித்தும் டெஸ்கோ குறித்தும் கூறப்படு கிறது. 

இங்கிலாந்திலேயே பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் டெஸ்கோதான். அது என்ன செய்கிறது.

இங்கிலாந்தில் உள்ள சிறு விவசாயிகளை சுரண்டுகிறது.  

உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளை அது இவ்வாறு சுரண்டிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகள் தங்கள் விருப்பம் போல சாகுபடி செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் சொல்கின்றவற்றைத் தான் சாகுபடி செய்ய முடியும். 

இது வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயி களுக்கு பேரிடியாக அமைந்து விடும். உள்ளூர் சந்தைகளுக்கு ஏற்ப விவசாயிகள் பயிரிடுவது முடிவுக்கு வந்து விடும்.  

சிறு விவசாயிகள் நேரடியாக உள்ளூர் சந்தைக்கு தங்கள் விளை பொருளை கொண்டு செல்ல முடியாது.

அவர்கள் பல்வேறு இடைத்தரகர்களை பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சூப்பர் மார்க்கெட்டின் தரத்திற்கு ஏற்ப அளவு மற்றும் தரம் சீரானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல கட்டு ப்பாடுகளுக்கு ஆட்பட நேரிடும்.

தரம் சரியானதாக இல்லையென்றால் பொருள் நிராகரிக்கப்பட்டு விடும்.

கார்ப்பரேட் சிறு வணிக நிறுவனங்கள் விவசாயி களுக்கு இணக்கமானவை என்பது முற்றிலும் தவறானதாகும். அவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை.
வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் சேமிப்பு வசதிகளையும் மற்ற வற்றையும் அதிகரிக்கும். இதனால் சேதாரம் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள சாலைகளில் தேசிய நெடுஞ் சாலைகளின் பங்கு 2% மட்டுமே. ஆனால் 40% சாலைப் போக்குவரத்தை இந்த தேசிய நெடுஞ் சாலைகள் கையாள்கின்றன.

மற்ற சாலைகளில் 20 அடிக்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும். 

உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமே இந்த சாலைகளின் மூலம் பொருட்களை கொண்டுவர முடியும்.

வால்மார்ட் களும், டெஸ்கோக்களும் சாலைகளைப் போடாது. சாலைகளைப் போடவேண்டியது அரசின் பணிதான். 

இதற்குவால் மார்ட்டுகளும், டெஸ்கோக்களும் தேவை யில்லை. அடுத்த படியாக சேமிப்பு குறித்து பார்ப்போம்.

சமீபத்தில் எம்.ஐ.டி. சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. 

இந்திய கிராமங்களில் காணப்படும் நிலவரங்கள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கீழிருந்து மேலே செல்வதின் வாயிலாகத் தான் சேமிப்பு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.

விளை பொருட்களை சேதம் இன்றி பாதுகாக்க வேண்டுமானால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக குளிர் சாதன வசதி உடைய சேமிப்பகங்களைக் கட்டலாம்.


இதுதான் பயனுள்ளதாக இருக்கும். இதுதான் கிழிருந்து மேலே செல்லும் முறையாகும். 

மாறாக வால்மார்ட்டுகளும், டெஸ்கோக்களும் மேலே இருந்து கீழே இறங்கி வந்து சேமிப்பு வசதிகளை செய்து தரும் என்பது சரியானதல்ல.

இந்த ஆய்வறிக்கை வால்மார்ட்டுகளின் முகமுடியை கிழித்தெறிந்துள்ளது.  

இறுதியாக இந்திய சில்லறை வியாபாரம் தொடர்பான முக்கிய அம்சத்தை மேலோட்டமான விவாதம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. 

இந்திய சில்லறை வர்த்தகம் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரமே உறவுகளின் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறதே தவிர. ஒப்பந்தங்களின் அடிப்படையில் இல்லை. 

இதனால்தான் 60% வேளாண் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படு கின்றன. உறவுகளின் அடிப்படையில் தான் இந்த பகிர்வு நடைபெறுகிறது. 

உறவுகளுக்கு பதிலாக ஒப்பந்தங்கள் மேலாதிக்கம் செலுத்த முற்படுமானால் சந்தைப் பொருளாதாரம் என்பது சந்தை சமூகமாக மாறிவிடும்.

குடும்பங்கள் கூட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடும்.

“இங்கிலாந்தில் சமூகம் என எதுவும் இல்லை. தனி நபர்கள் இருக்கிறார்கள். குடும்பங்கள் இருக்கின்றன. அவ்வளவு தான்” என்று மார்க்கரெட் தாட்சர் ஒருமுறை கூறினார். 

அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் பாரம்பரிய சமூகத்தின் இயக்கம் இன்றி பாரம்பரிய ரீதியாக குடும்பங்கள் உயிர்த்திருக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக மெய்ப்பித்து காட்டி விட்டன. 

1970களில் அமெரிக்க பொருளாதார ஆய்வு மையம் குடும்பம் சார்ந்த நடவடிக்கை களை கூட கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

வரைமுறை யற்ற சந்தை, முதலில் உறவு அடிப்படை யிலான சமூகத்தை நிர்மூலமாக்கு கிறது.


அது குடும்பத்தை சீர் குலைக்கிறது. கடைசியாக ஒப்பந்தம் அடிப்படை யிலான சந்தை சமூகத்தை உருவாக்குகிறது. 

 உறவு அற்ற சில்லறை வியாபாரத்தின் முன்னோடிகளாக வால்மார்ட்டும் டெஸ்கோவும் உள்ளன. 

இது ஒப்பந்தம் சார்ந்த அமெரிக்க மற்றும் மேலை நாடுகளுக்கு வேண்டு மானால் பொருந்தலாம்.

மேலை நாடுகளில் கூட சந்தைப் பொருளாதாரமா? சந்தை சமூகமா? என்ற விவாதம் தொடங்கி யுள்ளது. 

சந்தை சமூகம் ஆங்கிலோ சாக்ஸன் அம்சத்தைக் கொண்டது என்று மற்றவர்கள் சாட தொடங்கி யுள்ளனர்.

இக்கட்டுரை தி நீயூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் டிசம்பர் 7 அன்று வெளியானது. அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழே சொடுக்கவும்..... ஆங்கிலத்தில் : எஸ். குருமூர்த்தி 
Tags:
Privacy and cookie settings