ராணுவ வீரர்கள் மேகி நூடுல்ஸ் சாப்பிட வேண்டாம் : ராணுவம் தகவல் !

ராணுவ வீரர்கள் மேகி நூடுல்ஸை சாப்பிட வேண்டாம் என்று ராணுவம், வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’, இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப உணவாக உள்ளது.

இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த நூடுல்சில் மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் அளவுக்கு அதிகமாக சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் எடுக்கப்பட்ட நூடுல்ஸ் மாதிரியில் இருந்து இது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச சந்தைகளில் இருந்து இந்த நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், ராணுவ வீரர்கள் மேகி நூடுல்ஸ் சாப்பிடவேண்டாம் என்று வீரர்களை ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், ராணுவ கேண்டீன்களில் மேகி நூடுல்ஸை அடுத்த உத்தரவு வரும் வரை விற்பனை செய்யக்கூடாது என்றும் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை மேற்கண்ட உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம் நாட்டில் உள்ள ஆயிரம் ராணுவ கேண்டீன்களில் நூடுல்ஸின் விற்பனை நிறுத்தப்படும் என்பதால் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று ராணுவம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடுமுழுவதும் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் வேளையில், நூடுல்ஸ் பாதுகாப்பானது உண்பதற்கு ஏற்றதுதான் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings