தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் காக்கா முட்டை.
நடிகை ஐஸ்வர்யா, சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இப்படம், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறது. ஜூன் 5-ம் தேதி வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், 'காக்கா முட்டை' சிறுவர்களை இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி சந்தித்தார் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டார்கள்.
ஏன் சந்தித்தார்கள் என்று இயக்குநர் மணிகண்டனிடம் கேட்டபோது "அது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தினரின் ஏற்பாடு. பசங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்.
பசங்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்றவுடன் தோனியை சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்.
நானும் பசங்களுக்கும் இங்கிருந்து மும்பை செல்ல ஏற்பட்டு செய்யப்பட்டு சனிக்கிழமை சென்று சந்தித்தோம்.
அது ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு. 'காக்கா முட்டை' படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில படக்காட்சிகளையும் தோனி பார்த்தார்.
ட்ரெய்லரில் வரும் ரயில் காட்சி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்களது முதல் படம் மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கேட்டு வெகுவாக பாராட்டினார்.
சப் - டைட்டிலோடு வரும் சில தமிழ் சினிமாவை பார்த்து இருப்பதாகவும், தொடர்ச்சியாக சப்-டைட்டில் போட்டு வந்தால் பார்ப்பேன் என்றும் தெரிவித்தார் தோனி.
தோனியிடம் ஆட்டோகிராப் மற்றும் அவரோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்" என்றார் மணிகண்டன்.