காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர் சீன மக்கள். உலகெங்கிலும் உள்ள சீன மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த பாம்பு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டாட்டம் 10 நாட்கள் வரை நடக்கும். இந்நிலையில் காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்கள் பாம்பு புத்தாண்டை கொண்டாட ஒரு புதுமையான வழியை தேர்வு செய்தனர்.
அவர்கள் 1,345 கிலோ எடையுள்ள பிரைட் ரைஸ் செய்தனர். சான் ஜோஸில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சைனாடவுனில் நேற்று காலை 6 மணிக்கு 52 சமையல் கலைஞர்கள் கூடினர்.
அவர்கள் 735 கிலோ அரிசி, 200 கிலோ கோழிக்கறி, 120 கிலோ பன்றிக் கறி, 20 கிலோ சீன சாசேஜ், முட்டைகள், வெங்காயம் உள்ளிட்டவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பிரைட் ரைஸ் தயாரித்தனர்.
கின்னஸ் உலக சாதன அதிகாரிகள் வந்து பிரைட் ரைஸை எடை போட்டுப் பார்த்தனர். இதுவரை தயாரிக்கப்பட்ட பிரைட் ரைஸில் இங்கு தான் அதிக அளவில் தயார் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இதையடுத்து இந்த பிரைட் ரைஸ் தயாரிப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்களில் பெரும்பாலானோர் ஹோட்டல்கள் வைத்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது