சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, பொறியியல் கலந்தாய்வை முன்னிட்டு மாணவர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளன.
சென்னை கிண்டியில் அமைந்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இங்கு வரும் 28ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.
முதலில் விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பின்னர் ஜூலை 1-ந்தேதி தொடங்கும் பொதுப்பிரிவு கலந்தாய்வு 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 8 அமர்வுகளாக நடக்கும் கலந்தாய்வில் தினமும் 6000 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாணவர்களுடன் அவர்களது பெற்றோரும் கலந்தாய்வில் கலந்து கொள்வது வழக்கம். இந்தக் கலந்தாய்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாணவருடன் வரும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரும் இந்த வசதியை பயன் படுத்தலாம்.
எனவே, ஆண்டுதோறும் மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. அதன்படி, இந்தாண்டும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
இந்தப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பெருங்களத்தூரில் இருந்தும் கலந்தாய்விற்கு செல்ல வசதியாக இயக்கப்பட உள்ளன.
மேலும், இந்தப் பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேராக செல்லும் என போக்குவர்த்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை பேருந்துகள், எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.