நண்பரை சுட்டுக்கொன்ற வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் குமார். இவர் தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றியபோது, அங்கு ஆசிரியர்கள் பணி நியமன ஊழலில் சிக்கினார். இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


அந்த ஊழல் வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே வழக்கில்தான் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

சஞ்சீவ் குமாருக்கும், தொழில் அதிபரான அவரது நண்பர் டிக்கா ஹசன் முஸ்தபாவுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் ஊழல் வழக் கில் அடைக்கப்பட்டபோது சஞ்சீவ் குமார், அங்கு தாதா சவுக்கத் பாஷாவுடன் அறிமுகம் ஆனார். அவர் மூலம் தனது நண்பரை சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டினார்.

டிக்கா ஹசன் முஸ்தபாவை கொலை செய்வதற்கு ஆசாத் பாஷா, அப்தாப், மன்னன், தவுபிக், இர்ஷாத் ஆகிய கூலிப்படையினரை சவுக்கத் பாஷா ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையே டெல்லி நிஜாமுதீன் ஐ.டி.கேட் அருகே தவுபிக், துப்பாக்கி, தோட்டாக்களுடன் போலீசாரிடம் சிக்கினார்.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, டிக்கா ஹசன் முஸ்தபாவை கொலை செய்வதற்கு தானும், பாஷாவும், அவரது கூட்டாளிகள் ஆசாத், அப்தாப் உள்ளிட்டவர்களும் அமர்த்தப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

டிக்கா ஹசன் முஸ்தபாவை கொலை செய்து விட்டு, பழியை சவுதாலா குடும்பத்தினர் மீது போட்டு விடவும் சதி செய்துள்ளனர்.

தவுபிக்கிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் குமாரை, டெல்லியில் போலீசார் நேற்று கைது செய்தனர். சவுக்கத் பாஷாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings