ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்கி படமெடுத்தவர் திடீர் மரணம் !

மதுரையில் நடந்து வரும் கிரானைட் முறைகேடு வழக்கில் ஆளில்லாத விமானம் மூலம் கிரானைட் குவாரிகளைப் படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் திடீரென சாலை விபத்தில் மரணமடைந்தார்.
 
இதனால் விசாரணைக் குழுத் தலைவர் சகாயம் அதிர்ச்சி அடைந்துள்ளார். மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு படம் எடுத்து கொடுத்தவர் பார்த்தசாரதி.

ஆளில்லாத விமானம் மூலம் இவர் படம் எடுத்துக் கொடுத்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சாலை விபத்தில் பார்த்தசாரதி திடீரென பலியாகி விட்டார்.

இது விபத்தா அல்லது கொலையா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் சகாயம் தலைமையிலான குழு, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

மலை மற்றும் கரடு முரடான பாதைக்கு சகாயம் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொள்கிறார். ஆட்கள் சென்று பார்க்க முடியாத இடங்களுக்கு ஆளில்லாத குட்டி விமானங்களை கொண்டு ஆய்வு நடத்தினார் சகாயம்.

இந்த குட்டி விமானங்களை இயக்கியவர் பார்த்தசாரதி. இவர், சகாயம் குழுவினர் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு ஆளில்லாத குட்டி விமானங்களை அனுப்பி படங்கள் எடுத்தார். எடுத்த அனைத்து படங்களையும் சகாயம் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவரை விட்டுவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பார்த்தசாரதி, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது.

இதில் பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேகத்தடையை தாண்டி 20 மீட்டர் தூரத்தில் பார்த்தசாரதி கார் மரத்தில் மோதியதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சகாயம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings