கேரளாவில் பலாப்பழம் தின்று மயங்கி விழுந்த காட்டு யானை

கேரள மாநிலம் நிலம்பூரை அடுத்த இடக்கரை, வழிக்கடவு பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். இந்த வழியாக ஒரு காட்டு யானை வந்தது.
 கேரளாவில் பலாப்பழம் தின்று  மயங்கி விழுந்த காட்டு யானை
அது அந்த பகுதியில் உள்ள ஒரு வீடு முன்பு நின்ற பலா மரத்தில் காய்த்து தொங்கிய பலாப்பழங்களை பிடுங்கி தின்றது.

சில மணி நேரம் நின்று கொண்டே பழங்களை தின்ற யானை பின்னர் அங்கிருந்து ஆடி அசைந்து சென்றது.

சில அடி தூரம் நடந்ததும் யானை திடீரென கீழே மயங்கி விழுந்தது. காலை தூக்கியபடி வாலை அசைத்து கொண்டு வலியால் பிளிறியது.

இச்சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் பாலகிருஷ்ணன், அருனேஷ் தலைமையில் ஊழியர்கள் அங்கு வந்து யானையை பரிசோதித்தனர்.

பின்னர் கால்நடை டாக்டர் அருண் வரவழைக்கப்பட்டார். அவர், யானையின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் யானைக்கு குளுக்கோஸ் உள்ளிட்ட பானங்கள் அளிக்கப்பட்டன.

என்றாலும் யானை இரவு வரை எழும்பவில்லை. இதற்கிடையே காட்டுக்குள் திரியும் மற்ற யானைகளும் மயங்கி கிடந்த யானையை பார்க்க ஊருக்குள் வரத்தொடங்கின.

அவற்றை வனத்துறையினர் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிராமத்திலும் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings