கி.மு. 776. பண்டைய கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாறு பதிவு செய்துள்ளது.
மன்னர் எஜியஸூடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற ஹெர்குலிஸ், தமது வெற்றியின் அடையாளமாக
ஒலிம்பியா என்னும் மைதானத்தை உருவாக்கியதோடு அங்கு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார்.
கிரேக்க கடவுள் ஜீயஸூக்கு (Zeus) எடுக்கப்படும் திருவிழாக் காலங்களில் தான் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போதும் இந்தப் போட்டிகள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான் நடத்தப்பட்டன.
தடகள ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரையோட்டம், மற்றும் ராணுவ வீர விளையாட்டுகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
அங்கு வசித்த அப்போலனியஸ் என்ற வரலாற்றாசிரியர் எழுதி வைத்த குறிப்புகள் தான் பண்டைய கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றி அறிய உதவுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள், எத்யேஸ் மன்னர் காலம்வரை நீடித்து வந்தது. ரோமாபுரி ஆட்சியாளர் தியோடோஷயஸின்
விளையாட்டுகள் மீதான வெறுப்பினால், கி.மு 393ல், 203வது ஒலிம்பிக்ஸோடு பண்டைய ஒலிம்பிக்ஸுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
நவீன ஒலிம்பிக் போட்டிகள்:
அடுத்த 1500 வருடங்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளே நடக்கவில்லை. கி.பி. 1894ல் கூபர்ட்டின் என்ற பிரெஞ்சுக்காரர், டர்பனில் விளையாட்டு ஆர்வலர்களை ஒன்று திரட்டினார்.
நவீன ஒலிம்பிக் போட்டிகள் இந்த இடத்திலிருந்து ஆரம்பித்தன.
புராதன கால ஒலிம்பிக்ஸ் போலவே நவீன ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1896 ஏப்ரல் 6-ல் கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் மைதானத்தில், முதல் நவீன ஒலிம்பிக் போட்டியை மன்னர் ஜார்ஜ் தொடக்கி வைத்தார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட வில்லை. தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் என 43 போட்டிகள் நடைபெற்றன.
கி.மு 490ல், நடந்த மாரத்தான் போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தான் நகரிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸுக்கு
ஓடி வந்து சொன்ன கிரேக்க வீரர், மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!" என்று கூறி, உயிர் துறந்தார்.
இவருடைய நினைவாக மாரத்தான் என்ற ஓட்டப்பந்தயமும் சேர்க்கப்பட்டது. முதல் பரிசாக வெள்ளிப் பதக்கமும் இரண்டாவது பரிசாக வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டன.
இரண்டாவது ஒலிம்பிக்ஸில் (பாரிஸ், 1900) கிரிக்கெட், புறாவைத் துப்பாக்கியால் சுடுதல் போன்ற விளையாட்டுகள்
முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டு பிறகு அடுத்த ஒலிம்பிக்ஸிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
மூன்றாவது ஒலிம்பிக்ஸிலிருந்து (செயிண்ட் லூயிஸ், 1904) முதலில் வெற்றி பெறுபவர்களுக்குத் தங்கப் பரிசு கொடுக்கப்பட்டது.
1896 முதல் 2008 வரை 29 ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றுள்ளன. உலகப் போர் காரணமாக 1940, 1944 ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் நடக்கவில்லை.
ஐந்து வளையங்கள்:
அனைத்து மக்களிடையே விளை யாட்டு நட்புறவைக் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவை ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள்.
இந்த 5 வளையங்களும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் (வட மற்றும் தென்) அமெரிக்கா எனும் ஐந்து கண்டங்களைக் குறிப்பிடுவதாகும்.
ஒலிம்பிக் தீபம்: பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஜோதியாக ஒலிம்பிக் தீபம் இருக்கிறது.
ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரியக் கிரணங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது.
வரலாற்றுத் துளிகள்:
1936ல் ஜெர்மனியில் ஹிட்லர் மேற்பார்வையில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின அத்லெட் வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
தங்க வென்ற அத்தனை பேரையும் பார்த்துப் பேசிய ஹிட்லர் ஜெஸ்ஸி ஓவன்ஸை மட்டும் கண்டு கொள்ளவேயில்லை.
ஓவன்ஸுக்கு ஏற்பட்ட அவமானத்தால் கறுப்பர்கள் அடைந்த வலி 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸில் வெளிப்பட்டது.
200மீ ஓட்டப் பந்தயத்தில் கறுப்பின அமெரிக்கர்களான ஸ்மித்தும் கார்லோஸும் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள்.
பரிசு வாங்க வரும்போது இருவரும் கறுப்புப் பட்டையை அணிந்து, அமெரிக்க தேசிய கீதம் ஒலித்த போது
கறுப்பு க்ளவுஸ் அணிந்த கைகளை உயர்த்திக் காட்டி தங்கள் கோபத்தை உலகுக்குக் காட்டினார்கள்.
1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, ரஷ்ய ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்து மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகியது அமெரிக்கா.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில், ரஷ்ய வீரர்களின் பாதுகாப்பில் சந்தேகங் கள் எழுந்துள்ளன என்று அந்த ஒலிம்பிக்ஸைப் புறக்கணித்தது ரஷ்யா.
1896-2010 வரை நடைபெற்ற கோடை மற்றும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ஒருங்கிணைந்த ரஷ்யா, ஜெர்மனி (கிழக்கு-மேற்கு) நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
ச.ந.கண்ணன்