ரயிலில் பயணிப்பவர்களில் பெரும்பாலானோர் விமானத்தைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணமே கட்டணம்தான். ஓரளவு கட்டுப்படியாகும் வகையில் கட்டணம் இருந்தால் பலரும் விமானத்தை தேர்வு செய்வார்கள்.
அத்தகைய வாய்ப்பை ஸ்பைஸ்ஜெட் வழங்க திட்டமிட்டுள்ளது.
ரயிலுக்கு டிக்கெட் முன் பதிவு செய்துவிட்டு டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போருக்காக இத்தகைய வசதியை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி ரயிலுக்கு முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்பவர்களில் ஓரளவு கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருப்பவர்களுக்கு இத்தகைய வாய்ப்பை அளிக்க ஸ்பைஸ்ஜெட் முன்வந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
கூடுதல் கட்டணமானது அவர்கள் பயணிக்கும் இடம் மற்றும் காலத்தைப் பொறுத்து அமையும். பயணிகள் அடர்வு குறைவாக இருக்கும் சமயத்தில் கட்டணம் குறைவாக இருக்கும்.
ஐஆர்சிடிசி-யுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை அளிக்க வேண்டும் என்பதுதான். ஏற்கெனவே இதுபோன்று ரயில் பயணிகளுக்கு விமான பயண டிக்கெட்டை அளித்து வருகிறோம். இது இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம். இவர்களில் சிறிதளவு கூடுதல் தொகை செலுத்தி விமான பயணத்தை தேர்வு செய்வோருக்கு அத்தகைய வசதியை ஸ்பைஸ்ஜெட் அளிக்கும்.
இது பயணிகளுக்கும் விமான நிறுவனத்துக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் விஷயம் என்று இந்திய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்தார்.
விமானத்தின் இருக்கைகள் என்பது அழுகும் காய்கறி, பழங்களைப் போன்றது. காலியான இருக்கைகளுடன் விமானம் பறந்தால் அது நிறுவனத்துக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒப்பந்தம் விமான நிறுவனங்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது என்று ஸ்பைஸ்ஜெட் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை முன்னர் உருவாக்கிய நிறுவனரான அஜய் சிங்கே தற்போது அந்நிறுவனத்தை மீண்டும் வாங்கியுள்ளார். இதுவரை அந்நிறுவனத்தில் ரூ. 800 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து 7 காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த இந்நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் ரூ. 22.51 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.