மும்பை செம்பூர் பகுதியில் வேகமாக காரை ஓட்டிவந்து டாக்சி மீது மோதி இருவர் பலியாக காரணமாக இருந்த பெண் வக்கீல் சராசரி அளவை விட நான்கு மடங்கு போதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஜானவி கட்கர் (35) என்ற பெண் மும்பை ஐகோர்ட்டில் வக்கீல் ஆக உள்ளார்.
ஒரு முன்னாள் நிறுவனத்தின் துணை தலைவராகவும் இருந்த இவர் கடந்த பத்தாம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் மும்பை செம்பூர்– ஆர்.சி.எப். பகுதியில் தனது காரை ஓட்டி வந்தார்.
தாறுமாறாக ஓடிய அவரது கார் எதிரே வந்த ஒரு டாக்சி மீது மோதியது. அந்த டாக்சியை டிரைவர் முகமது உசேன் (57). ஓட்டி வந்தார்.
அதில், தேர்வில் வெற்றி பெற்ற மகனுக்கு விருந்தளித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிவாண்டியில் இருந்து மும்பை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் டாக்சி டிரைவர் முகமது உசேன் மற்றும் அதில் பயணம் செய்த முகமது சலீம் சபூவாலா ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
விசாரணையில் பெண் வக்கீல் ஜானவா கட்கர் மது அருந்தி இருந்ததாகவும், போதையுடன் கார் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விபத்து நடந்தபோது அவர் போதையில் தான் இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக அந்த பெண் வக்கீலின் ரத்த மாதிரியை சேகரித்த போலீசார் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
சாதாரணமாக, மது அருந்தி போதை தெளியாமல் இருக்கும் நபரின் உடலில் உள்ள 100 மி.லி. ரத்தத்தில் 30 மி.லி.
எரிச்சாராயம் (ஆல்கஹால்) கலந்திருந்தால், அது அனுமதிக்கப்பட்ட போதை அளவாக கருதப்படுகின்றது.
ஆனால், ஜானவி கட்கரின் ரத்தப் பரிசோதனை முடிவில் 100 மி.லி. ரத்தத்தில் 130 மி.லி. எரிச்சாரயம் கலந்திருந்தது இந்த ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது, விபத்து நடைபெற்ற அந்த அதிகாலை வேளையில் அந்தப் பெண் வக்கீல் நான்கு மடங்கு குடிபோதையில் இருந்தது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, இந்த விபத்து பற்றிய வழக்கின் தீர்ப்பில் இவருக்கு மிக அதிக பட்சமான தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.