அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஒரு உணவகத்தின் நிரந்தர வாடிக்கையாளராக வந்து செல்லும் டான் தாமஸ் (வயது 72) சில நாட்களாக உணவகத்தின் பக்கம் வரவில்லை.
இதையறிந்த அந்த ஓட்டலின் பெண் ஊழியராகப் பணிபுரியும் 22 வயது மரியானா வில்லாரியல், அவருக்கு என்ன ஆனது என விசாரித்தார்.
நீண்டகாலமாக சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அந்த முதியவர் புற்றுநோயின் தாக்கத்தால் இரண்டு சிறுநீரகங்களும் செயலற்று போன நிலையில்,
ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மரியானாவுக்கு தெரிய வந்தது. மரியானாவின் பாட்டியும் இதற்கு முன் சிறுநீரகக் கோளாறினால் இறந்து போனார்.
இதை எண்ணி வருந்திய மரியானா, அந்த முதியவருக்கு தனது இரு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளிக்க முன் வந்தார்.
முன்னறிவிப்பின்றி ஆஸ்பத்திரிக்கு சென்ற மரியானா, ‘எனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தரவா?’ என டான் தாமசைப் பார்த்து கேட்டபோது அவர் கேலி செய்கிறார் என்றே நினைத்துக் கொண்டார்.
ஆனால், உண்மையிலேயே தனது சிறுநீரகத்தை தானம் தரத்தான் மரியானா இங்கு வந்துள்ளார் என அறிந்து கொண்ட டான் தாமஸ், கண்ணீர் வடித்தார்.
டாக்டர்களிடம் தனது விருப்பத்தை மரியானா தெரிவிக்க, இருவருக்கும் நடத்தப்பட்ட மரபணு சோதனையில் மரியானாவின் சிறுநீரகம் டான் தாமசுக்குப் பொருந்தும் என தெரியவந்தது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.