1590-ல் ஆலந்து கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென், சிறிய பொருட்களைப் பெரிதுபடுத்திக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ராஸ் கோப்) கண்டுபிடித்தார்.
கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க நுண்ணோக்கி போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி யிருக்கிறார்.
17-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆலந்து நாட்டு கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளர் அண்டன் லீவென்குக், பாக்டீரியாவையே ஆராயும் அளவுக்கு நுண்ணோக்கியை மேம்படுத்தினார்.
ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். அதே கால கட்டத்தில் பிரிட்டீஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக், `மைக்ரோகிராபியா’ என்ற நூலை வெளியிட்டார்.
அதில், நுண்ணோக்கி மூலம் பார்க்கும் போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப் பட்டிருந்தது. அதன் பின்னரே மைக்ராஸ்கோப் பிரபலமானது.
நுண் உயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிப்பே காரணம்.
தொலைவில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவுவது தொலை நோக்கி (டெலஸ்கோப்). 1608-ம் ஆண்டு ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற ஆலந்து நாட்டுக்காரர் முதன் முதலில் தொலை நோக்கியை உருவாக்கினார்.
1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலை நோக்கியும், பைனாக்குலரும் அதையடுத்து வந்தன.
18-ம் நூற்றாண்டில் கண்ணாடி அணிவதற்குப் பதிலாக சிறிய தொலை நோக்கியைத் தூக்கித் திரிவது சிலரின் வழக்கமாக இருந்தது.