வியட்நாமில் டாங் டாவோ என்ற அரிய வகை கோழிகள் வளர்க்கப் படுகின்றன. இவை மிகவும் பிரபலமானவை.
மிக முக்கியமான நிகழ்ச்சிகளிலும் வசதியானவர்களின் இல்லங்களில் மட்டுமே இந்தக் கோழிகளை வைத்து உணவு தயாரிக்கிறார்கள். சாதாரண கோழிகளை விட உருவத்தில் இவை மிகவும் பெரியவை.
இவற்றின் கால்கள் தடிமனாகவும் சதை முடிச்சுகளுடனும் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தாலும் கோழியின் சுவை அட்டகாசமாக இருக்கிறது என்கிறார்கள்.
ஒரு கிலோ டாங் டாவோ கோழி 1000 முதல் 1200 ரூபாய் வரை வியட்நாமில் உள்ள மிகச் பணக்கார உணவு விடுதிகளில் மட்டுமே டாங் டாவோ இறைச்சி கிடைக்கிறது.
டாங் டாவோ கோழிகள் பிரத்யேகப் பண்ணைகளில், தனித் தனிக் கூண்டுகளில் வளர்க்கப் படுகின்றன.
டாங் நய் மாகாணத்தில் வு டுவான் என்பவரின் பண்ணையில் 400 ஜோடி கோழிகள் இருக்கின்றன. தினமும் நகரில் உள்ள முக்கிய உணவு விடுதிகளுக்காக 12 கோழிகள் இங்கிருந்து அனுப்பப் படுகின்றன.
டாங் டாவோ கோழிகளுக்குத் தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை. நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் என்றாலும்,
இந்தக் கோழிகளைப் பராமரிப்பது கடினம் என்பதால் மக்கள் வளர்க்க விரும்புவதில்லை.
வித்தியாசமான இனம் தான் டாங் டாவோ…
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பதிப்பாளர், புதுமையான விதத்தில் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சூழலியலைப் புரிந்து கொள்ளவும் மரம் வளர்ப்பைக் கண் முன்னால் பார்க்கும் படியும் இந்தப் புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார்.
மரம் பற்றிய தகவல்களுடன் விதைகளும் புத்தகத்தில் வைத்து, தைக்கப் பட்டிருக்கின்றன.
குழந்தைகள் படித்து முடித்த பிறகு, தாங்களே மண்ணைத் தோண்டி, இந்தப் புத்தகத்தைப் புதைத்து, தண்ணீர் ஊற்றி விட வேண்டும்.
சில நாட்களில் புத்தகத்தில் இருந்து துளிர் எட்டிப் பார்க்கும். தொடர்ந்து பராமரித்தால் மரத்தின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்துக் கொள்ள முடியும்.
8 முதல் 12 வயதுடைய குழந்தைகள் படிக்கும் விதத்தில் ‘மரம்’ என்ற தலைப்பில் வெளியிடப் பட்டிருக்கும் இந்தப் புத்தகம், உலகிலேயே முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.
மட்டில்டா பூனை இணைய தளங்களில் ஏராளமான ஆதரவை பெற்று வருகிறது. சாதாரண பூனையின் கண்களை விட மட்டில்டாவின் கண்கள் மிக மிகப் பெரிதாக இருக்கின்றன.
வேற்றுக்கிரக வாசிகளின் கண்கள் போன்று பிரம்மாண்டமாக இருக்கின்றன. இத்தனை பெரிய கண்கள் இருந்தும் மட்டில்டாவால் சரியாகப் பார்க்க முடியவில்லை.
பிறக்கும் போது சாதாரணமாக இருந்த மட்டில்டா, ஓராண்டுக்குள் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டது. மருத்துவம் செய்து முடித்த போது, மட்டில்டாவின் கண்கள் பெரிதாகி விட்டன.
இது மரபணு குறைபாட்டால் ஏற்பட்ட பிரச்சினை. கண்களில் இருந்த லென்ஸ் நகர்ந்து விட்டதால், பார்க்கும் திறனை இழந்து விட்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மட்டில்டாவின் கண் அறுவை சிகிச்சைக்காக ஏராளமான நன்கொடைகள் குவிந்துள்ளன. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், கவனமாகவும் மெதுவாகவும் ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள்.