தமிழ்நாட்டில் அரசு மான்யத்துடன் 1200 வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு

தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு கடந்த 2012–ல் பிரத்யேக மின் சக்தி கொள்கையை வெளியிட்டது.
 
இதன்படி சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் நிறுவும் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட அதானி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுமட்டுமின்றி வீடுகளில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தையும் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

வீடுகளுக்கு அதிகபட்சம் 1 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி பேனலுக்கு அரசின் மானியம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதைக் கொண்டு வீட்டில் 4 டியூப்லைட், 2 மின்விசிறி, 1 டி.வி. இயக்க முடியும்.

வீடுகளில் சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவ, ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். இதில் ரூ.20 ஆயிரத்தை தமிழக அரசு மானியமாக தருகிறது.

இதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவ இதுவரை 3 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1200 பேர் பணிகளை முடித்து மானியமும் பெற்று மின்சாரம் தயாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும் 5 ஆயிரம் முதல் 5400 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
 
இது பற்றி எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி அமைப்புகளை வீடுகளில் நிறுவ அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுத்து ஊக்குவித்து வருகிறோம்’’ என்றார்.
Tags:
Privacy and cookie settings