பெட்ரோல் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2–வது நாளாக போராட்டம்

திருவாரூர் அருகே எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்குழாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியதால் கிராம மக்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் அவர்கள் ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்களின் கூடாரங்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி படுகையான டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் அமைத்து பூமிக்கு அடியில் உள்ள எண்ணெய் வளங்களை எடுத்து வருகின்றது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் 300–க்கும் அதிகமான ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவதால் விளைநிலங்கள் பாதிப்பு அடைகின்றன.

இதனால் மீண்டும் சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக மாறி வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. மூலம் புதிய ஆழ்குழாய் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள கரையாம் பாலையூர் ஊராட்சி பாக்கம் கிராமத்தில் மேலத்தெரு மகா மாரியம்மன் கோவில் அருகே உள்ள விளைநிலங்களில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

நேற்றுமுன்தினம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்குழாய் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.

அங்கு போடப்பட்டிருந்த இரும்பு கூரைகளை பிரித்து எடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று மீண்டும் ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் பணிகளை தடுத்து, அங்கு ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை கிழித்து எறிந்து, பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை விரட்டி அடித்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பணிகள் நிறுத்தப்பட்டு, ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings