கருப்புப் பண சட்டத்தை வெளியிட்டது அரசு: செப்டம்பர் 30 வரை காலக்கெடு

கருப்புப் பண சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டது. மேலும் வெளிநாட்டில் உள்ள சொத்துகளை எப்படி மதிப்பீடு என்பது குறித்த விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்த விதிமுறைகள் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
அயல்நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பை கணக்கிடும் விதிமுறைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. | கோப்புப் படம்.
அசையா சொத்துகள், நகைகள், மதிப்பு மிக்க கற்கள், ஓவியங்கள், பங்குகள். (பட்டியலிட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குகள்) ஆகியவற்றை தற்போதைய சந்தை விலையில் அதற்கான மதிப்பு கணக்கிடும் என்று மத்திய வரி ஆணையம் (சிபிடிடீ) தெரிவித்திருக்கிறது.

அதேபோல வெளிநாட்டு வங்கிகளில் கணக்கை தொடங்கியதில் இருந்து செய்யப்பட்டிருக்கும் அனைத்து டெபாசிட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வெளிநாட்டில் உள்ள சொத்துகளை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்காக 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் வெளிநாட்டில் உள்ள சொத்துகளை பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாம். இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்கும்போது வரி மற்றும் அபராதம் என 60 சதவீதம் மட்டுமே செலுத்தி பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடலாம்.

மேலும் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் இருக்காது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தகவல்களை தெரிவிக்கலாம். வரி செலுத்துவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரம் தெரிய வரும் போது, வெளிநாட்டு சொத்துகளில் 120 சதவீதம் (வரி மற்றும் அபராதம்) செலுத்த வேண்டும். இதை தவிர சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

அசையா சொத்துகளின் மதிப்பு தற்போதைய சந்தை விலையில் மதிப்பிடப்பட்டு கணக்கில் கொள்ளப்படும். இதே விதிதான் நகைகள், கற்ககள், ஓவியங்கள், சிலைகள் என அனைத்து மதிப்பீடுகளுக்கும் எடுத்துக்கொள்ளப்படும்.

பங்குகளின் மதிப்பு வாங்கிய விலையை விட அதிகமாக எடுத்துக்கொள்ளப்படும் அல்லது பங்கின் குறைந்த விலை மற்றும் உயர்ந்த விலையின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும்.

வெளிநாட்டில் உள்ள சொத்துகளை எவை என்பது குறித்து ஏழு விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த வங்கியில் முதலீடு செய்திருந்தார், வங்கியில் கணக்கு தொடங்கப்பட்ட தேதி, அதில் முதலீடு செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவேண்டும்.

இதேபோல அசையா சொத்து, பங்கு உள்ளிட்ட சொத்துகளை தற்போதைய சந்தை மதிப்புடன் சேர்த்து பதிவு செய்யப்பட வேண்டும். தங்கம் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் போது அவற்றின் தூய்மைத்தன்மையுடன் பதிவு செய்யவேண்டும்.

வெளிநாட்டு பணத்தை இந்தியா ரூபாய்க்கு மாற்றும்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் பரிமாற்ற தகவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tags:
Privacy and cookie settings