தமிழக கோவிலில் திருடப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான மாணிக்கவாசகர் சிலையை அமெரிக்க சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய தொழில் அதிபர் சுபாஷ் கபூர். இவர் அங்கு மன்ஹாட்டனில் பழங்காலத்தை சேர்ந்த அபூர்வ கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கலைகாட்சிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார்.
இவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சாமி சிலைகளை கொள்ளையடித்து, அவற்றை கடத்திச்சென்று உலகமெங்கும் விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் போலீசின் பிடியில் சிக்கினார்.
அவர் 2011–ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது சிறைக்காவலில் உள்ளார்.
அவரது சிலை கடத்தல் லீலைகள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தானில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கைலாச நாதர் கோவிலிலும் பல சாமி சிலைகளை தனது கும்பல் மூலம் சுபாஷ் கபூர் கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையும், அர்த்தனாரீஸ்வரர் சிலையும் ஆஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டு,
அவற்றை அந்த நாட்டின் பிரதமர் டோனி அப்போட், பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த ஆண்டு ஒப்படைத்தது நினைவு கூரத்தகுந்தது.
அந்த கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் ஒன்று, மாணிக்கவாசகர் சிலை. இந்த சிலை 11 அல்லது 12–ம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது.
2½ அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலை, ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) மதிப்பிலானது என கருதப்படுகிறது.
இந்த சிலையை ஆசிய கலைப் பொருட்களை சேகரித்து வரும் அமெரிக்கர் ஒருவர் வாங்கி உள்ளார்.
இப்போது, அவர் சுபாஷ் கபூர் சிலை கடத்தல் விவகாரம் குறித்து தகவல்கள் அறிந்ததும், தாமாகவே முன் வந்து, தான் வாங்கி வைத்திருந்த மாணிக்கவாசகர் சிலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இதை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவின், உள்நாட்டு பாதுகாப்பு முகமை கலாசார சொத்துகள் பிரிவு சிறப்பு ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘இந்த மாணிக்க வாசகர் சிலையை ஒப்படைத்த நபர், அதை 2006–ம் ஆண்டு வாங்கி உள்ளார்.
அவரிடம் சிலை எங்கிருந்து வந்தது என்பது பற்றிய தவறான தகவல்களை கொண்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன’ என கூறினர்.
மீட்கப்பட்ட சிலை, முறைப்படி அமெரிக்க பெடரல் அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது.
மாணிக்கவாசகர் சிலை தவிர்த்து மேலும் 6 சிலைகளை உள்நாட்டு பாதுகாப்பு முகமை கலாசார சொத்துகள் பிரிவு கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நியூயார்க்கில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு முகமை கலாசார சொத்துகள் பிரிவு ஏஜெண்டு ரேமண்ட் பார்மர்
இது குறித்து அளித்த பேட்டியின் போது, ‘இன்னொரு நாட்டின் கலாசார சொத்தினை திருடுவது என்பது மிகவும் கடுமையான குற்றம்.
அது அந்த நாட்டின் தேசிய பாரம்பரியத்தை கொள்ளையடிப்பதாகும்.
திருடப்பட்ட சிலையை திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்று சிலையை சேகரித்து வைத்திருந்தவர் மனசாட்சிப்படி எடுத்த முடிவு பாராட்டுக்குரியது’’ என கூறினார்.
மாணிக்க வாசகர் சிலை மீட்கப்பட்டது குறித்து, மத்திய அரசுக்கு அமெரிக்கா முறைப்படி தெரிவிக்கும்.
அதன் பின்னர் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.