விம்பிள்டன் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ்: 6-வது முறையாக பட்டம்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் சாம்பியன் டிராபியுடன், முகுருஸா அவரது ரன்னர் டிராபியுடன். | படம்: ஏ.பி.

 சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார்.

இது அவரது தொடர்ச்சியான 4-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இத்துடன் 21 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

தொடக்கத்தில் மந்தமாக ஆடிய செரீனா மொத்தம் 8 டபுள் பால்ட்களைத் தனது சர்வில் செய்தார், மேலும் முடிக்கும் போதும் பதட்டத்துடன் முடித்தார்.

அடுத்ததாக வரும் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ஒரே சீசனில் 4 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்துவார். ஸ்டெஃபி கிராப் இந்தச் சாதனையை 1988-ம் ஆண்டு நிகழ்த்தினார்.

முதல் செட்டில் 2-4 என்று பின் தங்கியிருந்தார் செரீனா வில்லியம்ஸ், ஆனால் அதன் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பேக்ஹேண்ட், ஃபோர்ஹேண்ட்,வாலி ஷாட்களில் கலக்கி 5 தொடர் கேம்களை வென்று முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினார்.

2-வது செட்டில் 5-1 என்று முன்னிலை பெற்று சடுதியில் போட்டியை வெல்ல முடியவில்லை. முகுருஸாவும் இளைத்தவர் இல்லை, அவர் எதிர்கால நட்சத்திரம் ஆவார்.

வில்லியம்ஸ் சர்வை முறியடித்து 2-5 என்று வந்தார் முகுருஸா, பிறகு மேட்ச் பாயிண்ட்டிலிருந்து தப்பித்த முகுருஸா 5-வது பிரேக் பாயிண்டை வென்று 4-5 என்று வில்லியம்சை மிரட்டினார்.

கடைசியில் முகுருஸா சர்வை முறியடித்தார் வில்லியம்ஸ், முருகுஸா, தனது ஷாட்டை வைடாக அடிக்க செரீனா மகிழ்ச்சியுற்றார்.
Tags:
Privacy and cookie settings