தமிழகத்தில் இதுவரை 5 கோடி பேருக்கு ஆதார் அட்டை !

தமிழகத்தில் 5 கோடியே 9 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப் பட்டுள்ளது. மீதம் உள்ள 1 கோடியே 65 லட்சம் பேருக்கு வரும் அக்டோபர் மாதத் திற்குள் வழங்கப்படும். 
ஆதார் அட்டை

வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டு, நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம், ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பத்திரப்பதிவுத் துறையில் நிலம் பதிவு செய்ய,

பான் கார்டு பெற, மத்திய, மாநில அரசு டெண்டர், மானியங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு, பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கு,

அரசு வேலை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, நீதிமன்ற நடவடிக்கை, ஷேர் மார்க்கெட், தொழில் உரிமம், விவசாய நிலம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

விழிப்புணர்வு அதிகம்

தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணை சேர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கான முகாமும் தற்போது நடந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மத்தியிலும் தற்போது ஆதார் அட்டை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு வருகிறது.

பலர் ஆதார் அட்டை விண்ணப்பத்தை எங்கு சென்று வாங்குவது, எப்படி ஆதார் அட்டையை வாங்குவது போன்ற பல தகவல்கள் தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

5 கோடி பேருக்கு வினியோகம்

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் புகைப்படம், கைரேகை உள்ளிட்ட பல தகவல்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது.

மொத்த மக்கள் தொகை 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேரில், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி 5 கோடியே 9 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூடுதலாக 43 லட்சத்து 84 ஆயிரத்து 101 பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 82 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

அக்டோபர் மாதத்துக்குள்....

இந்த மாதத்துடன் இந்த பணியை மத்திய அரசு நிறைவு செய்ய அறிவுறு த்தியது. ஆனால் மீதம் உள்ள 1 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேருக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வழங்க வேண்டியுள்ளது.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இதற்காக பொதுமக்கள் அவசரப்பட்டு அரசு அலுவலக ங்களுக்கு அலைந்து திரிய வேண்டியதில்லை.

வசிக்கும் வீடுகள் அருகிலேயே உள்ள ஆதார் அட்டை வழங்கும் முகாம்களுக்கு சென்று முறைப்படி விண்ணப்பித்து பெறலாம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 78 மையங்கள்

தமிழகம் முழுவதும் 522 மையங்களில் இந்த பணி தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்தப்பணியை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 120 மையங்கள் அதிகரிக்கப்பட்டு,

தற்போது மாநிலம் முழுவதும் 640 மையங்களில் இந்தப்பணி நடந்து வருகிறது. சென்னையில் 10 நிரந்தர மையங்கள் உள்பட 78 மையங்கள் செயல்படுகிறது.

ரேஷன் கார்டு, வங்கி கணக்கு அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து சென்று ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆன்-லைனில் திருத்தம்

இந்த பணி முடிவடைந்து 2 மாதங்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு பதிவு தபாலில் ஆதார் அட்டை அனுப்பப்படும்.

ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைந்து போனாலோ அல்லது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தாலோ அவற்றையும் ஆன்-லைனில் திருத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings