அம்மா சிமெண்ட்.. இதுவரை 1 கோடி மூட்டைகள் விற்பனை !

அம்மா சிமெண்ட் விற்பனை திட்டத்தின் கீழ் 1 கோடி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அம்மா சிமெண்ட் விற்பனை திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி மூட்டைகள் விற்பனை
 
இதுகுறித்து தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : -

 ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டும் கனவை நினைவாக்கும் வகையில் குறைந்த விலையில் ''அம்மா சிமெண்ட் விற்பனை திட்டம்'' தொடங்கப்பட்டது.

இதன் மூலம் மூட்டை ஒன்றுக்கு ரூ,190/- என்ற விலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும், 470 கிட்டங்கிகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 16.07.2015 வரை ஏறக்குறைய 5.17 இலட்சம் மெட்ரிக் டன்கள் அதாவது 1 கோடி சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏறக்குறைய 1,33,595 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 1500 சதுர அடிகளுக்கு உட்பட்டு புதிய வீடுகட்டுபவர்களுக்கு 750 மூட்டைகளும், பழைய வீட்டை பழுது மற்றும் புதுப்பிப்பதற்கு 10 முதல் 100 மூட்டைகளும் சிமெண்ட் வழங்கப்படுகிறது.

இம்முன்னோடி திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வீட்டு கட்டுமான செலவு வெகுவாக குறைவதோடு தரமுள்ள சிமெண்டினை தமிழக அரசின் மூலம் பெறமுடிகிறது.

பொது மக்கள் அம்மா சிமெண்ட் திட்டத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு 1800-425-22000 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது மக்கள் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings