முதலில் மதுவிற்கு தடை விதியுங்கள்.. மும்பை ஐகோர்ட் 'குட்டு'

முதலில் மதுவிற்கு தடை விதியுங்கள்; அது உடல்நலத்திற்கு மிகவும் தீமை விளைவிக்கக் கூடியது; தற்போது பள்ளி குழந்தைகள் கூட மது அருந்தி வருகின்றனர் என மும்பை ஐகோர்ட் கண்டித்துள்ளது.
மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடை சரி தான் என வாதிட்ட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம், மேகி நூடுல்ஸ் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என தெரிவித்தது.

உணவு பாதுகாப்பு அமைப்பின் வாதம் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் வி.எம்.கனாடே மற்றும் பி.பி.கோலாபவல்லா ஆகியோர், " முதலில் மதுவிற்கு தடை விதியுங்கள். தற்போது பள்ளி குழந்தைகள் கூட மது அருந்துகிறார்கள். அது தான் உடல் நலத்திற்கு மிகவும் கேடானது.

மது என்ன உணவு பொருளா? இதே போல் சிகரெட்டும் உணவு பொருட்கள் பட்டியலில் சேராதது. அதுவும் உடல்நலத்திற்கு கேடானது தான்" என தெரிவித்துள்ளனர்.

நெஸ்லே இந்தியா நிறுவன மூத்த வழக்கறிஞரும், நாட்டில் எந்த மதுபான வகையும் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை கழகத்தின் உற்பத்திக்கான அனுமதியை பெறவில்லை என வாதிட்டார்.

தங்களின் தயாரிப்பு லேபிள்களில் எம்.எஸ்.ஜி., இல்லை எனவும் தெரிவித்தது. மேகிக்கு தவறாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்றும் வாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மேகி நுடில்சில் நடத்தப்பட்ட 42 சோதனைகளில் அதிக அளவிலான காரீயம் இருப்பதாக எந்த சோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை.
Tags:
Privacy and cookie settings