தீப்பந்த ஒளியில் புறப்பட்ட விமானம்.. துணிச்சல் காட்டிய அப்துல் கலாம்

தனது 83-வது வயதில், வாழ்வின் கடைசி நொடியையும் மாணவர், இளைஞர் களின் மத்தியில் கழித்த அப்துல் கலாம் தீரம் மிக்க குடியரசுத் தலைவராக இருந்தார். 
 அப்துல் கலாமுக்கு ஆந்திர மாணவர்கள் அஞ்சலி. | படம்: ராம்பாபு
குடியரசுத் தலைவராக இருந்தபோது, நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தும், சுகோய் போர் விமானத்தில் பறந்தும், உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சின் பனிச்சிகரங்களுக்குச் சென்றும், 

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியும் துணிச்சல் காட்டியவர். 

டார்ச் மற்றும் லாந்தர் விளக்குகளால் விமானத்தின் ஓடு பாதை ஒளியூட்டப்பட வேண்டிய சூழலில், அய்ஸ்வால் விமான நிலையத்திலிருந்து இரவில் விமானத்தில் புறப்படும் துணிச்சல் யாருக்கும் இருக்காது. 

ஆனால், கலாம் இதில் விதிவிலக்கு.
கடந்த 2005-ம் ஆண்டு கலாம் மிஸோரம் சென்றிருந்த போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் அவரின் மூத்த உதவியாளர் ஒருவர்.

மிஸோரமில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அலுவல் நிமித்தமான பணி முடிந்தது. அடுத்த நாள் காலையில்தான் அவர் டெல்லி திரும்புவது என்பது பயணத் திட்டம். எப்போதும் புன்னகையுடன் காட்சியளிக்கும் கலாமுக்கு, இருப்புக் கொள்ளவில்லை. 

இரவி லேயே டெல்லி கிளம்புவது என முடிவு செய்துவிட்டார். உடனடியாக, அப்பகுதி விமானப்படை நிலைய தலைமை அதிகாரிக்கு, இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த விமான நிலையத்தில் இரவில் கிளம்புவதற்கான வசதி இல்லை என பதிலளித்தார் அந்த அதிகாரி. அத்துடன் விஷயம் முடிந்து விட்டதாக அவர் கருதினார்.

இந்த விளக்கம் கலாமை ஆசுவாசப்படுத்து வதாக இல்லை. 

“அவசரநிலையாக இருந்தால் என்ன செய்வீர்கள். இந்திய விமானப்படை காலை வரை காத்திருக்குமா? நான் புறப்பட வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள். தேவையான ஏற்பாடுகள் செய்யப்படட்டும்” என கலாம் கூறிவிட்டார். 

குடியரசுத் தலைவரும், முப்படைகளின் தலைவருமான கலாமின் இந்தத் தகவல் உடனடியாக விமானப்படை அதிகாரிக்குத் தெரி விக்கப்பட்டது. அந்த விமானப்படை அதிகாரி உடனடியாக டெல்லியில் உள்ள மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். 

ஆனால், டெல்லியிருந்து விமானப்படை அதிகாரிக்கு ஆதரவான பதில் வரவில்லை. இந்தியாவின் ஏவுகணை மனிதரின் உத்தரவை நிறைவேற்றும்படி கட்டளை வந்தது. வேறு வழியில்லை. 

ஓடுபாதையின் அருகே லாந்தர் விளக்குகள் வைத்தும், தீப்பந்தங்களைக் கொளுத்தியும் தற்காலிக வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டது. விமானம் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கு தயார் செய்யப்பட்டது. 

குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட அந்த விமான தளத்திலிருந்து இரவில் புறப்படுவது குறித்து, குடியரசுத் தலைவரின் உதவியாளர்கள் கவலையடைந்தனர். 

இந்த நிலையில் ஓடுதளத்திலிருந்து விமானம் கிளம்புவது பாதுகாப்பானதுதானா என தனிப்பட்ட முறையில் விமானப்படை அதிகாரி யிடம் கேட்கப்பட்டது.

“விமானம் புறப்படும். ஆனால், அது திரும்பும்போது சில பிரச்சினைகள் எழலாம்” அதிகாரியின் பதில், கலாமின் உதவியாளர்களின் முதுகுத் தண்டை அச்சத்தால் ஜில்லிட வைத்தது. 

இரவு 9 மணிக்கு, குடியரசுத் தலைவரின் விமானம், கலாம் மற்றும் அவரின் குழுவினர் 22 பேருடன் புறப்பட்டது. பாதுகாப்பாக டெல்லியை அடைந்தது. அப்போது கலாம் காட்டியது அசாத்திய துணிச்சல். 

இந்த பெரும் தேசத்தின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது, துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ண காந்த்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கலாம், பொறுப்பேற்றவுடன் செய்த முதல் பணி, கிருஷ்ண காந்த்தை மருத்துவமனையில் சென்று பார்த்ததுதான். மருத்துவமனையில் அவரைச் சந்தித்த முதல் நபரும் கலாம்தான். 

அவரிடம் தீரம் மட்டுமல்ல ஈரமும் இருந்தது. 
Tags:
Privacy and cookie settings