கோகுல்ராஜ் கொலையை விசாரிக்க குழு வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உண்மை அறியும் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது. 
 
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கடந்த 26-ம் தேதி கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி மாணவர் கொலை செய்யப்பட்டார். 

இந்நிலையில், இந்த கொலை குறித்து சென்னை உதவி பேராசிரியர் சி.லட்சுமணன், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி ஆய்வாளர் அன்புசெல்வம், 

ஆய்வாளர்கள் ஜெகநாதன், கார்த்திகேயன் தாமோதரன் ஆகியோர் அடங்கிய தலித் செயல்பாட்டுக்கான வாசகர் வட்டத்தின் உண்மைக் அறியும் குழு நேற்று முன்தினம் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

இதுகுறித்து தலித் செயல்பாட்டுக்கான வாசகர் வட்டத்தினர் கூறும்போது, "காவல்துறையினர் கூறுவதுபோல கோகுல்ராஜும், ஸ்வாதியும் நண்பர்கள் அல்ல. அவர்கள் இருவரும் காதலர்கள்தான். கோகுல்ராஜ் பேசிய வீடியோவில் தம்பியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். 

ஆனால், அவருக்கு தம்பி இல்லை. அண்ணன்தான் உள்ளார். மேலும், வீடியோ காட்சியில் பதிவான அவரது பேச்சுக்கள் முழுவதும் பிறர் சொல்லி கொடுத்ததை மட்டுமே மனப்பாடம் செய்து பேசியுள்ளார் என்பது தெளிவாகப் புரிகிறது. 

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை குறித்த விசாரணையில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே இந்த கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். 

சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கவுரவ கொலைகள் நடந்துள்ளதால் கவுரவ கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். 

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. எனவே அவர்களை அழைத்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும். கொலையின் முக்கிய குற்றவாளியான யுவராஜைக் கைது செய்ய வேண்டும்" என்றனர். 
Tags:
Privacy and cookie settings